Sunday, April 5, 2009

இறையுதிர்காலம்-5: கனவில் உருவாகி...

பூமியின் தெற்கு அரைக்கோளத்தை (Southern hemisphere) எடுத்துக்கொண்டால் ஆஸ்திரேலிய பூர்விகக்குடிகளின் பாறை ஓவியங்கள் முக்கியமானவை. இங்கே ஏறக்குறைய 40,000 ஆண்டுகளாக பாறை ஓவியங்கள் தீட்டப்பட்டு வந்துள்ளன. இன்றைக்கும் பூர்விகக்குடி மக்களிடம் தொடரும் புனித பாரம்பரியமாக இந்த பாறை ஓவியங்கள் இருந்துவருகின்றன. டாஸ்மானியா போன்ற ஆஸ்திரேலிய தீவுகளிலும் மிகப்பழமையான பாறை ஓவியங்கள் கிடைத்திருக்கின்றன. ஆஸ்திரேலிய பூர்விகக்குடியினர் இந்த பாறை ஓவியங்களை நனவுலக வாழ்க்கையைச் சார்ந்த ஓவியங்களாகவும் கனவுக்கால (Dreamtime: இது ஒரே வார்த்தை: Dream time என இருவார்த்தைகள் அல்ல.) ஓவியங்களாகவும் பிரிக்கின்றனர். கனவுக்காலமே சிருஷ்டியின் காலம். இது நிகழ்ந்து முடிந்த ஒன்று அல்ல.மாறாக நிகழ்ந்து கொண்டே இருப்பது. நாம் வாழும் யதார்த்த நனவுலக காலத்துடன் இணைந்து செல்லும் புனிதக்காலமே கனவுக்காலம் ஆகும். இக்கனவுக்காலத்தில் வசிக்கும்/செயல்படும் சக்திகள் தங்களை வெளிப்படுத்தும் விதமே இந்த புனித பாறை ஓவியங்கள் ஆகும். பூர்விகவாசிகள் "தாமாகவே கனவுக்காலங்களிலிருந்து பாறைகளில் வெளிப்படுத்திக்கொள்பவை" என இவற்றை கருதுகின்றனர். வானவில்-சர்ப்பம், மூதாதை வடிவங்கள் போன்றவை கனவுக்காலத்திலிருந்து பாறைகளுக்கு வரும் புனித ஓவியங்கள் ஆகும். இவை இறை-ஆவேசியாலும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சடங்குப்பயிற்சிகள் அளிக்கப்பட்ட அவரது சீடர்களாலும், அவர்களது ஆவேசத்தன்மையுடன் உருவாக்கப்படுபவை. கனவுக்காலத்திலிருந்து நனவுக்காலத்தில் வருவது ஒருவித முழுமைத்தன்மையை இழப்பதாக - ஒருவித இறப்பாக- இவர்களால் காணப்படுகிறது. அதாவது பிறப்பு என்பதே ஒருவித இழப்பும் இறப்பும்தான். பின்னர் இவ்வுலகிலிருந்து மீண்டும் படிப்படியாக முழுமை அடைவதற்கு ஒரு கருவியாக இந்த ஓவியச்சடங்குகள் பயன்படுகின்றன. கனவுக்காலத்துக்கு இங்கிருந்தபடி உங்கள் பிரக்ஞையை நகர்த்த இறை-ஆவேச பயணங்கள் செயல்படுகின்றன. கனவுக்காலத்துக்குள் ஆழ்ந்து செல்ல அதற்கேற்ற பயிற்சிகளை பெற வேண்டும். பெண்களும் பயிற்சி பெற்று கனவுக்காலத்துக்குள் சென்று ஓவியங்களை நனவு பிரக்ஞையின் தளத்துக்கு கொண்டு வர முடியும்.

கனவுக்காலத்தை பல்வேறு ஆஸ்திரேலிய பூர்விகக்குடி சமுதாயங்களையும் ஒருங்கிணைக்கும் இறை-அனுபவமாகக் கொள்ளலாம். பூர்விகக்குடி குழுக்களிடையே கனவுக்காலத்தின் இயற்கை குறித்த வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. நனவுக்காலத்துக்குள்ளேயே இயங்கும் ஒரு காலமாக கனவுக்காலத்தை சில பூர்விகக்குடிகளும் நனவுக்காலத்துக்கு இணைக்காலமாக கனவுக்காலத்தை சில பூர்விகக்குடிகளும் காண்கிறார்கள். ஆனால் அனைத்து பூர்விகக்குடிகளும் சிருஷ்டி என்பது நிகழ்வதே கனவுக்காலத்தில்தான் என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.

வெள்ளை இன மக்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறியபோது அங்கிருந்த பூர்விகக்குடிகளை கிறிஸ்தவத்துக்கும் ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கும் மாற்ற முற்பட்ட போது பூர்விகக்குடிகள் தங்கள் அடையாளத்தைக் காப்பாற்ற ஒரு கருவியாக பாறை ஓவிய சடங்குகளை மேற்கொண்டனர். சில புனித இடங்களில் மேற்கொள்ளப்படும் சடங்குகளின் மூலம் கனவுக்காலத்துக்குள் ஒருவர் செல்லமுடியும் என அவர்கள் கருதுகின்றனர். எனவே இயற்கையாக உருவான சில புவி-அமைப்புகள் கனவுகாலத்துக்கு செல்ல ஏதுவான புனித இடங்களாக அவர்களால் போற்றப்படுகின்றன. எவ்வாறு இயற்கையின் விநோததன்மை இறை அனுபவ வினை ஊக்கியாக மனிதபிரக்ஞையில் செயல்படுகிறது என்பதனை அதன் தூய வடிவத்தில் ஆஸ்திரேலிய பூர்விகக்குடிகளில் காணலாம். ஆஸ்திரேலிய பூர்விகக்குடிகளால் "புராஞ்சி" என அழைக்கப்படும் இடம் "Arnhem land" என வெள்ளையர்களால் அழைக்கப்படுகிறது. இந்த இடமே விண்கற்களால் மிக அதிகமாக வடு ஏற்பட்ட இடமாக ஆஸ்திரேலியாவில் உள்ளது. இந்த இடம் கனவுக்காலத்துடன் தொடர்பு கொள்ளும் சடங்குகள் நடத்தப்படும் புனித பூமியாக ஆஸ்திரேலிய பழங்குடிகளால் கருதப்படுகிறது. மற்றொரு மிக முக்கியமான புனித தலமாக ஆஸ்திரேலிய பழங்குடிகளால் போற்றப்படும் இடம் உல்யுரு(uluru) எனப்படும் பிரம்மாண்டமான பாறையாகும். வெள்ளையர்களால் Ayer's rock என இது அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கண்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது இந்த பாறை. 8 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அடிப்பாகமும் 350 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பாறை கனவுக்காலத்தின் சிருஷ்டி தொன்மங்கள் பூமியைத் தொட்ட தலமாக பூர்விகக்குடிகளால் வணங்கப்படுகிறது. (இப்பாறையில் ஏறுவது அதன் புனிதத்தை அவமதிக்கும் செயலாக அவர்கள் கருதுகின்றனர். அங்கு வரும் சுற்றுலாவினரை அதனை மதிக்கக் கோரி ஒரு அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய அரசு சுற்றுலா பயணிகளை இப்பாறையின் மீது ஏற அனுமதிப்பதுடன் வசதியும் செய்து கொடுத்துள்ளது. ஆனாலும் இது ஆபத்தானது என்பதுடன் இப்பாறையில் ஏறும் முயற்சிகளில் மரணங்களும் சம்பவித்துள்ளன.) ஆஸ்திரேலியா எங்கும் உள்ள பூர்விகக்குடிகள் இப்பாறைக்கு புனித காலங்களில் குறிப்பிட்ட பாதைகள் மூலம் வருகின்றனர். புனித ஓவியங்கள் தீட்டப்படுகின்றன. இப்பாதைகள் கனவு-இழைகள் மூலம் இப்பாறையுடன் இணைக்கப்பட்டவையாக கருதப்படுகின்றன.

ஒருவிதத்தில் இவை அனைத்தும் நம் இறை-அனுபவங்கள் எத்தகைய வேறுபட்ட அக-சக்திகளாலும் புறச் சூழல்களாலும் உருவாக்கப்படுகின்றன என்பதை காட்டுகின்றன. எளிய இயற்கை வழிபாட்டிலிருந்து முன்னகர்ந்து மானுடம் பண்பாடு அடைய அடைய மத-நம்பிக்கைகள் முதிர்ச்சி அடைந்தனவா? அல்லது இறை-அனுபவக்கிளர்ச்சியும் அதன் சடங்கு வெளிப்பாடுகளும் அவற்றின் உயிர் மையத்தில் முழுமையான அனுபவமாகவே விளங்கிட, நம் பண்பாடுகளின் உதிரி முலாம்களே அவற்றை சிக்கலான இறையியல் தத்துவங்களாகவும், மதங்களாகவும் மாற்றிக்காட்டுகின்றனவா?

எதுவானாலும் ஆஸ்திரேலிய பூர்விகக்குடிகளின் கனவுக்காலம் எனும் கருத்தாக்கம் மானுடப்பிரக்ஞையின் அறிவியலில் ஒரு முக்கியமான தாவலாகும். இதன் மூலம் இறை-அனுபவத்தின் ஒரு முக்கிய பரிமாணத்தை அவர்கள் கண்டடைந்ததுடன் அதனை ஒரு பண்பாடாகவே அவர்கள் வளர்த்தெடுத்துள்ளனர். "வளர்ந்த" மதங்கள் உருவாக்கியுள்ள இறையியல் கதைகளையும் தத்துவார்த்த வியாக்கியானங்களையும் விட இறை-அனுபவம் எனும் நிகழ்வுக்கு உண்மையின் மிக அருகில் செல்லும் பார்வை இதுவே என்பதனை இத்தொடரில் போக போக தெரிந்து கொள்ளலாம்.

2 comments:

  1. // இறை-அனுபவம் எனும் நிகழ்வுக்கு உண்மையின் மிக அருகில் செல்லும் பார்வை இதுவே என்பதனை இத்தொடரில் போக போக தெரிந்து கொள்ளலாம்.//

    இன்னும் எவ்வளவு தூரம் போஅக்னும் சாமியோவ்???

    ஒரு மாசமும், அஞ்சு நாளும் ஆயிருச்சி,...எதோ பாத்து செய்யுங்க.

    ReplyDelete
  2. ஜூலை பதிணெட்டு இன்று.. வெற்றிகரமான 108வது நாள்.. இன்னும் எத்தனை நாள்தான் இந்தப் படத்தையே ஓட்டுவீர்கள்.. தயவு செஞ்சு ஸ்லைட மாத்துங்க சாமியோவ்.....

    ReplyDelete