Thursday, September 3, 2009

இறையுதிர் காலம்-6: வானின் உயரத்திலிருந்து அகத்தின் ஆழத்துக்கு

கற்கால மனிதன் தன் வானியல் அவதானிப்புகளை தொன்மங்களாக மாற்றினான். அவனது அகத்திலிருந்து எழுந்த தொன்மங்களும் அவனது புறத்திலிருந்து கிடைத்த அவதானிபுகளும் அவனுள்ளும் வெளியிலும் மோதின. சில அடிப்படை அக-தொன்மப்படிவங்களும் ஆதாரமான வானியல் நிகழ்வுகளும் இக்காலத்தில் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தன. கண்ணுக்கு தெரியாத பிரம்மாண்ட அச்சுகளை மையப்படுத்திய சுழல்கள் நடந்தேறுவதையும், இந்த சுழல்களில் ஒரு அடிப்படையான பிரபஞ்ச ஒழுங்கு இருப்பதையும் அவன் அறிந்தான். இந்த ஒழுங்கினை சில குறியீடுகள் மூலம் காட்ட முற்பட்டான். இந்த குறியீடுகள் தூல உருவம் பெற்றன. அவை இந்த சுழல்களினை கணிக்கும் கருவிகளாகவும் மாறின. அவையே பெரும் நடுகற்களாக உலகெங்கிலும் காட்சி அளிக்கின்றன.

இதிலிருந்து பெறப்பட்ட ஒரு சித்திரமான பிரபஞ்ச அச்சு பின்னர் பல பண்பாடுகளில் பல வடிவங்களைப் பெற்றது. மூவுலகங்களிலும் வேரும் கிளைகளும் கொண்ட பிரபஞ்ச விருட்சம், பெரும் மலையின் சிகரம், பிரபஞ்ச புருஷன் போன்றவை பின்னர் வரும் மதங்களில் முக்கிய இடங்களைப் பெறும் இந்த சித்திரங்களின் வேர்கள் மானுடத்தின் கூட்டு-ஆழ் மனமானது அதன் மலர்ச்சியின் ஆதி தருணங்களில் வானில் கண்ட ஒழுங்கு முறைகளிலிருந்தும் அந்த ஒழுங்கு முறையில் அது கண்ட அதிசயிக்கத்தக்க மாற்றங்களிலிருந்தும் பெற்றுக்கொண்டது.

இவ்வாறு புற உலகில் காணப்படும் ஒழுங்கு நிகழ்வுகள் அக-வெளியில் பெரும் அனுபவ கிளர்ச்சியாகி மானுட இறையுணர்வில் பேணப்படும் என்பதனை ஒரு இந்திய எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். வேத-வேள்விச்சடங்கான அக்னிசாயன மேடையைச் சுற்றி 360 செங்கற்களால் சிறு அரண் செய்யப்படுகிறது. இவை வருடத்தின் நாட்களைக் குறிக்கின்றன. அம்மேடை ஐந்து அடுக்குகளாக செய்யப்படுகிறது - ஐந்து பருவங்களின் குறியீடாக. இந்த அரண் அமைப்பின் போது ஒவ்வொரு செங்கல்லுக்கும் 1200 பதங்கள் சொல்லப்படுகின்றன. ஆக மொத்தமாக 432000 பதங்கள். இந்த எண் பூமியின் பம்பர சுழற்சியினால் ஏற்படும் ருது (சமநோக்கு நாள்களின்) - பின்னோட்டத்துடன் (precession of equinox) தொடர்புடையது. இதைப் போலவே பல தொன்மங்களும் வானியல் நிகழ்வுகளுடன் தொடர்புடையவையே ஆகும்.

கற்கால வேர்களில் தொடங்கி, மானுடத்தால் கவனமாக கண்காணிக்கப்பட்ட வான் மேடை ஒழுங்கில் ஏற்பட்ட சில பெரும் மாற்றங்கள் மானுடத்தின் சில முக்கியமான பொது தொன்மப்படிமங்களை ஏற்படுத்தின. அவை இன்றும் அவ்வப்போது எதிர்பாராத இடங்களில் தம்மை வெளிக்காட்டுகின்றன. உதாரணமாக பிரஜாபதி ரோகிணியை நோக்கி செல்வதைக் கண்டு தேவர்கள் திகைத்து நிற்க அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ருத்திரன் பிரஜாபதியை நோக்கி அம்பு எய்யும் தொன்மக்கதை ரிக் வேதத்தில் உள்ளது. வேதப்பாடல்களின் தொன்மங்கள் தொல்நினைவுகளிலிருந்து பெறப்பட்டவை. வேள்விச்சடங்கு வசந்த சமநோக்கு நாளில் தொடங்கியது. அந்நாளின் சூரியோதயத்தின் சில தருணங்களுக்கு முன் ஒரு விண்மீன் மண்டலம் அதனை அறிவிக்கும் விதமாக அங்கு காட்சியளிக்கும். அதன் பெயர் ம்ருகம் அல்லது ம்ருகசிரஸ் -ஆங்கிலத்தில் ஓரையன் (Orion). இவ்விண்மீன் கணமே ஒரு சுபிட்ச தொடக்கத்தின் அடையாளமாக தொல்பழங்கால வான் நோக்கிகளால் காணப்பட்டது. அத்தொல் பழங்காலங்களின் பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு விதங்களில் வசந்த சுழலின் தொடக்கச் சடங்கில் இந்த விண்மீன்கணமே தொடக்கப்புள்ளியாக அமைந்திருந்தது. பிறகு சூரியனின் வசந்த உதயம் அதிலிருந்து ரோகிணிக்கு (Aldebaran) மாறியது. இந்த மாற்றம் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைய வான்நோக்கிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சூரியனின் வசந்த ருது உதயத்திற்கு முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும். அந்த வான்நோக்கிகளுக்கு இது பெரும் அதிர்ச்சி. இந்நிகழ்ச்சி இன்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. யார் இதனை தடுத்து நிறுத்துவார்கள்? அதனை செய்பவனே ருத்திரன். வானின் மிகப்பிரகாசமான நட்சத்திரத்துடன் (Sirius) அவன் தொடர்புபடுத்தப்படுகிறான் பிரஜாபதி மானாக ரோகிணியை நோக்கி செல்கிறான். ருத்திரன் (ம்ருகவ்யத்தா, Sirius) பிரஜாபதியை நோக்கி அம்பெய்கிறான். ருத்திரனின் இந்த விண்மீன் தொடர்பு அவனை வானவீதியின் புனித நாயாகவும் காட்டுகிறது. தொல்பழங்காலத்தின் வான்நோக்கிகளுக்கு இந்த நிகழ்வு பெரும் அழிவுகளை அல்லது மகா மாற்றங்களை கொண்ட ஒன்றாக தென்பட்டிருக்கும். எனவே அவர்கள் ருத்திரனின் கொடுமையான தலையீட்டை விழைந்தார்கள். இந்த வானியல் பெரும் மாற்றம் பூமியில் குழப்பங்களை ஏற்படுத்தவில்லை. ருத்திரன் சுழல் மாற்றங்களின் தெய்வமானான். பிரளயங்களின் தேவதை.

இந்த தொன்மங்கள் எந்த அளவு நம் கூட்டு நனவிலிக்குள் ஊடுருவியுள்ளன என்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள். ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் பிரளயங்களை மாற்றங்களை நனவின் ஓரத்தில் நிழல்வெளி உருவமாகக் காட்டிச்சென்று கொண்டே இருக்கும் கருநாய்: மற்றொன்று ஜே.கே.ரௌலிங்கின் ஹாரிபாட்டரில் வரும் சிரியஸ் எனும் பாத்திரம் - உருமாற்ற திறன் கொண்ட அந்த மந்திரவாதி ஓநாயாக தன்னை மாற்றிக்கொள்பவன். இன்றைய நவீன இலக்கியத்தின் ஆகச்சிறந்த படைப்பிலும் உலகெங்கிலும் குழந்தைகள் இலக்கியத்தில் தன்னை ஒரு சூறாவளிசக்தியாக நிறுவிய படைப்பிலும் வெளிப்படும் ஒரு பொது சித்திரத்தின் மூலவேர்கள் நம் தொன்பழங்கால முன்னோர்கள் வானியல் நிகழ்வொன்றினால் சீர்குலைந்து பெற்ற அகவெழுச்சியின் எதிரொலி என்பதும் இறையனுபவத்தின் ஒரு பகுதியே. இறையனுபவம் எனும் அப்புரியா புதிரினை விளங்க வைக்க நமக்கு கிடைக்கும் ஒரு மிக எளிய துப்பு என்று சொல்லலாம்.