Wednesday, April 1, 2009

இறையுதிர் காலம் 4: குகையில் கருவாகி...

பனியுகம் முடிந்த போது சமவெளிகளெங்கும் பசுமை படர ஆரம்பித்தது. பனியுகத்தில் வளர்ந்து வந்த நியாண்டர்தல்கள் இப்போது அழிய ஆரம்பித்தனர். மற்றொரு இரண்டுகால்களில் நடக்கும் பெருங்குரங்கினம் பல்கிப் பெருக ஆரம்பித்தது. அதன் பெயர் மனிதர்கள் (Homo sapiens). இன்றைக்கு எறக்குறைய 24000 ஆண்டுகளுக்கு முன் வரை கூட நியாண்டர்தல்கள் வாழ்ந்திருந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நம் மானுட முதாதையர் நியாண்டர்தல்களுடன் மோதியிருக்கலாம், நட்பு கொண்டாடியிருக்கலாம் ஏன் பாலியல் உறவுகள் கூட ஏற்பட்டிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் சந்ததிகள் இனப்பெருக்கம் செய்ய முடியாது அந்த பரம்பரை நின்றுவிட்டிருக்கக் கூடும். இருந்தாலும் நியாண்டர்தல் ஜீன்கள் மானுட மரபுக்கோளத்தில் - Genome-இல் இருக்கக் கூடுமோ எனும் கேள்வி எப்போதுமே சுவாரசியமான ஒன்றாக இருந்துவருகிறது. எதுவாயினும் நியாண்டர்தல்கள் பரிணாம ஆற்றோட்டத்தில் கரைந்தழிய, மானுடம் பரவலாயிற்று.

மானுட உதயத்துடன் இணைந்து நாம் காணும் ஒருவிஷயம் அதன் இறை நம்பிக்கைகள். இங்கு இறை என்பது புனிதத்துவம், மரணத்துக்கு பின் உயிர் குறித்த நம்பிக்கைகள், அற்புதங்களின் நம்பிக்கைகள், ஆவேச சடங்குகள் என அனைத்தையும் அணைக்கும் ஒரு பதமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் ஆகச்சிறந்த வெளிப்பாடாக நாம் காண்பது குகை ஓவியங்களை. பூமியின் வட-அரைக்கோளத்தின் மிகப்பழமையான குகை ஓவியங்கள் என்று சொன்னால், அவை ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கிடைக்கிறது இத்தாலியில் கண்டெடுக்கப்பட்ட குகை ஒன்றில் இன்றைக்கு ஏறக்குறைய 36000 ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்ட ஓவியத்தில் மிருகத்தலை கொண்ட மனிதனை காணமுடிகிறது. அதே போல தெற்கு ஆப்பிரிக்காவில் அப்பல்லோ-11 என பெயரிடப்பட்ட இடத்திலுள்ள 25,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்களிலும் இத்தகைய விலங்கு உருவ மனிதர்களை காணமுடிகிறது இத்தகைய மனிதர்கள் விலங்குத்தோல் போர்த்திய இறை-ஆவேசியாக (shamans) இருப்பர். தம்முடன் வாழும் மக்களின் வேட்டைகள் நன்றாக அமைந்திட வழிகாட்டுபவர்கள். இந்த வழிக்காட்டுதலுக்கா அறிவை அவர்கள் தம் பிரக்ஞையை வேறுதளத்துக்கு கொண்டு சென்று ஆவேசம் அடைவதன் மூலம் பெறுகின்றனர். இவ்வாறு பிரக்ஞையை வேறு தளத்துக்கு நகர்த்துவது (altering the state of consciousness) கூட்டு இசை மூலம் அல்லது சடங்குகள் மூலம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம். இந்த இறை-ஆவேச நிலையுடன் பரம்பரை அறிவும் இணைந்திருப்பதன் மூலம் அன்றாடம் கிடைக்க வேண்டிய நல்ல வேட்டைக்கான குறிப்புகள் அந்த கூட்டத்தினருக்கு கிடைக்கும். எந்த கூட்டத்தின் இறை-ஆவேசி சிறப்பாக செயல்படுகிறானோ அந்த கூட்டம் நன்றாக பெருகும்; வலிமையுடையதா மாறும். நியாண்டர்தல்கள் காலத்திலேயே தாவரங்களுடன் மனித முன்னோடி புனித உறவுகளை உருவாக்க ஆரம்பித்துவிட்டான் என்பதனை கண்டோ ம். இந்த அறிவும் இறை-ஆவேசிக்கு இருந்திருக்கும். அத்துடன் வானில் காணும் விண்மீன்களின் இயக்கத்துடனும், நிலவின் கலைகளின் மாற்றங்களுடனும் புவியின் இயற்கை மாறுவதையும் அவன் உற்றுக்கவனிக்க ஆரம்பித்தான். வானின் மாற்றங்களை வைத்தே புவியின் இயற்கை சுழற்சிகளை கவனிக்கும் ஆற்றல் இறை-ஆவேசிக்கு கிடைத்த போது அவனது மனம் பெற்றிருக்கக்கூடிய கிளர்ச்சி, பின்னர் ஐன்ஸ்டைன் கூறிய பிரபஞ்ச இறை உணர்வுக்கு (cosmic religious consciousness) ஈடானதாகவே இருந்திருக்கக் கூடும். உதாரணமாக குகை ஓவியங்களின் உன்னத உச்சம் என கருதப்படும் பிரான்ஸின் லஸ்கோ(Lascaux) குகை ஓவியங்களை எடுத்துக்கொள்வோம். இவை 16,000 ஆண்டுகள் முதல் 22,0000 ஆண்டுகள் வரை பழமையானவை. இவற்றில் பல காளைகள் காட்டப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்த நவீன ஆராய்ச்சியாளர்கள் இவற்றில் விண்மீன் கூட்டங்களின் அமைப்பைக் காட்டும் சித்திரங்களை அடையாளம் காட்டுகின்றனர். பூமியில் தன் வாழ்க்கையை பாதிக்கும் நிகழ்வுகளையும் விண்மீன்களின் சுழல்களையும் ஏறக்குறைய 25,000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதன் இணைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டான். பல வானியல் நிகழ்வுகள் பிற்கால தொன்மங்களுக்கு அடித்தளமாயின. அத்தொன்ம வேர்கள் கற்கால மனிதனின் அனுபவக்கிளர்ச்சியிலேயே புதைந்து கிடக்கக்கூடும்.

மற்றொரு முக்கியமானதோர் இறைத்தாவலும் இக்காலகட்டத்தில் நிகழ்ந்தது. பெண்ணின் மாதாந்திர சுழலுக்கு சந்திரனின் சுழலுக்குமான ஒரு தொடர்பு மானுட ஆழ்பிரக்ஞையில் ஏற்பட்டதற்கான முதல் வெளிப்பாடுகள் இக்காலகட்டத்திலேயே தோன்றின. லஸ்கோ குகையிலிருந்து சில மைல்கள் தூரத்தில் சுண்ணாம்பு பாறையொன்றில் கொத்தப்பட்டு நிற்கிறாள் 43 செமீ உயரம் கொண்ட பெண் தெய்வம். அவள் கைகளில் சந்திர வடிவத்தில் ஒரு காளை கொம்பு. அக்கொம்பில் சந்திரகலைகளைக் காட்டும் பிரிவுகள். நிச்சயமாக இவ்வடிவம் மானுட பிரக்ஞை வந்தடைந்த மிகப்பெரிய அறிதலாகும். பின்னால் எழுந்த அனைத்து தாய் தெய்வ வடிவங்களுக்கும் இந்த கற்கால தாய் தெய்வத்தின் மண்ணையும் விண்ணையும் இணைக்கும் பிம்பம் மூலச்சட்டகமாகவே செயல்பட்டிருக்கிறது எனலாம். குகையையே ஆதி மனிதன் தாயின் கருவறையாகக் கண்டிருக்கலாம் என்று ஊகிக்கும் பெண்ணிய மானுடவியலாளர்களும் உண்டு.

நினைவில்
கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இங்கு: தாய் தெய்வம் எனும் கோட்பாடே விவசாய குடிகளின் பூமிப்பயன்பாட்டிலிருந்து எழுந்ததாகவே பல மானுடவியலாளர்கள் கருதிவந்தனர். கற்கால வேட்டை-சேகரிப்பு (hunter gatherer) காலகட்டத்தில் தாய் தெய்வ வழிபாடு எழுந்துவிட்டது என்பதும், இறை ஆவேசி மானுட பண்பாட்டை வாழ்வியலை நடத்திச்செல்லும் ஒரு ஆதார சக்தியாக பரிணமித்துவிட்டான் என்பதும் இன்று தொல்-மானுடவியல் நமக்கு தரும் காட்சி.

ஐரோப்பாவிலேயே மிக அதிகமான குகை ஆராய்ச்சிகள் நடந்திருப்பதாலும், பொதுவாகவே ஐரோப்பாவை மையப்படுத்தி உலகவரலாற்றை காண்பது மானுடவியல் புலங்களில் அதிகமாக உள்ளதாலும், தொல்-கற்கால வரலாற்றில் ஐரோப்பிய குகைகளே அதிக இடம் பிடித்துள்ளன. ஆனாலும் இன்று பிற கண்டங்களிலும் ஆராய்ச்சிகள் விரிவடைய விரிவடைய நாம் இந்த
ஐரோப்பிய மையப்படுத்தல் எனும் கதையாடலிலிருந்து விலகி மானுடம் குறித்த பார்வையை அகலப்படுத்த முடிகிறது. இன்றைக்கு வாழும் மதங்களின் சிக்கலான இறையியல் கோட்பாடுகள், கலையம்சங்கள் நிறைந்துயரும் ஆலயங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றால் நாம் காணும் நிறுவன மதங்களின் அடிப்படை ஆன்மிகப் பார்வைக்கு சிறிதும் குறையாத ஆன்ம-அனுபவங்களின் அடிப்படை குகை ஓவியங்களில் இருப்பதை நாம் அடுத்து காணலாம்.

No comments:

Post a Comment