Tuesday, March 31, 2009

இறையுதிர்காலம்: 3 நியண்டர்தல் கரடிக்கதைகள்


இத்தாலிக்கு மேற்கே இருக்கும் ஒரு குட்டி நாடு ஸ்லோவேனியா. இந்நாட்டில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்ட மிகப் பழமையான இடம் த்விஜே பேபி எனப்படும் ஒரு குகை. இக்குகை குடியேற்றத்தின் காலகட்டம் ஏறக்குறைய 55,000 ஆண்டுகளுக்கு முன்னர் என கணிக்கப்படுகிறது. இது நியாண்டர்தல்கள் எனப்படும் நவீன மானுட இனத்துக்கு முற்பட்ட மானுட முன்னோடி இனம். 1995 இல் இவான் துர்க் எனும் ஆராய்ச்சியாளர் இங்கே 43,100 ஆண்டுகள் பழமையான ஒரு எலும்புத்துண்டைக் கண்டுபிடித்தார். அதில் இரண்டு ஓட்டைகள். ஒருவேளை அந்த விலங்கைக் கடித்துக் கொன்ற விலங்கின் பல்தடங்களாக இருக்கும் என்றுதான் அது கருதப்பட்டது. பிறகு அப்படி இருக்க முடியாது என்பது தெளிவாயிற்று. இன்றைக்கு தேசிய அருங்காட்சியகத்தில் இந்த எலும்புத்துண்டு உலகின் மிகப்பழமையான புல்லாங்குழலாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அறிவிக்கப்பட்டு காட்சி பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது. நியாண்டர்தல்கள் குறித்த நம் பார்வை மாற்றத்தை காட்டும் ஒரு கண்டுபிடிப்பு இது.

டார்வினின் புகழ்பெற்ற நூல் வருவதற்கு முன்னரே நியாண்டர்தல் மானுட முன்னோடிகளின் எலும்புகள் கண்டெடுக்கப்படும் படலம் ஆரம்பித்துவிட்டது. அன்றைய தொல்-மானுடவியலாளர்கள் நியாண்டர்தல்களை ஒருவித மடச்சாம்பிராணிகளான மந்த புத்தி உடைய பண்பாடில்லாத பேசும் திறனோ எனவே மொழியோ இல்லாத பரிணாமத் தோல்விகளாக சித்தரி
த்துவந்தனர். பண்பாடற்ற மந்த புத்தி உடையவனாக ஒருவனை காட்டும் வசைச்சொல்லாக கூட பொது புழக்கத்தில் நியாண்டர்தல் எனும் பதம் பயன்பட ஆரம்பித்தது. ஆனால் மேலும் மேலும் ஆராய்ச்சிகள் நமக்கு நியாண்டர்தல்கள் குறித்த பார்வையை மாற்ற ஆரம்பித்தது. உதாரணமாக ஹைராய்ட் எலும்பு எனும் ஒரு எலும்பு மனிதர்களில் மட்டுமே நாக்கின் பல அசைவுகளை தொண்டை குழியுடன் இணைவிக்கும்படியாக எனவே ஒலி எழுப்புதலுக்கு காரணமாகும் படியாக அமைந்துள்ளது. இத்தகைய அமைப்பு நம் மானுட இனத்துக்கு மட்டுமே அமைந்துள்ள சிறப்பாக கருதப்பட்டது. எனவே மொழி மானுடத்தின் உயிரியல் சிறப்பாகக் கருதப்பட்டது. 1985 இல் கண்டெடுக்கப்பட்ட நியாண்டர்தல் எலும்புகளில் இதே அமைப்புடனான ஹைராய்ட் எலும்பு கண்டெடுக்கப்பட்டது. அவர்களின் கருவிகளின் பன்மையும் பயன்பாடும் தொல்-மானுட ஆராய்ச்சியாளர்களால் விரிவாக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன.

இந்நிலையில் நியாண்டர்தல்களிடம் நாம் காணும் முக்கிய அம்சம் - அதாவது இந்த தொடருக்கு மிக முக்கிய அம்சம்: அவர்களது மிக விரிவான ஈமச்சடங்குகள். நியாண்டர்தல்கள் தங்களில் நோயுற்றவர்களையும், காயமடைந்தவர்களையும் வயதானவர்களையும் பேணும் பண்பாட்டை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இது அவர்கள் வாழ்ந்த இடங்களை ஆராய்ந்ததன் மூலம் தெரியவருகிறது. ஆக, உயிர் பிரிதல் என்பது சோக நிகழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும். உயிர் பிரிந்த பின் ஏதோ ஒரு வாழ்க்கை இருக்கக் கூடும் எனும் நம்பிக்கையை காட்டும் சடங்குகளை அவர்களிடம் காணமுடிகிறது.

வடக்கு ஈராக்கில் நியாண்டர்தல்களின் அடக்க இடங்கள் கிடைத்துள்ளன. இதில் உள்ள ஒரு முழுமையான அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உடலில் எட்டுவித மலர்கள் தூவப்பட்டிருந்தன. உஸ்பெக்கிஸ்தானில் ஒரு நியாண்டர்தல் குழந்தையின் ஈமச்சடங்கில் அதனை சுற்றி ஆட்டெலும்புகள் வட்டமாக வைக்கப்பட்டிருந்தன. பிரான்ஸில் ஒரு நியாண்டர்தல் புதையல் மேற்கு கிழக்காக உடலை வைத்து அதனுடன் இறந்தவருக்கு இறைச்சி படையலாக வைத்து புதைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு இறப்பு குறித்த வேதனை ( முதியோரை பேணுதல் என்பது அவர்கள் மரணத்தை தடுக்க. ஏனெனில் மரணம் என்பது பிரிவு என்பதனை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.), மரணத்துக்கு பின் ஏதோ ஒரு வாழ்க்கை தொடர்ச்சி குறித்த உணர்வு ஆகியவை நியாண்டர்தல்களில் நாம் காண்கிறோம்.

இவற்றுக்கும்
அப்பால் அவர்களுக்கு வழிபாடு கூட இருந்திருக்கலாம் என்பதாக தொல்-மானுடவியலாளர்களில் கணிசமான பிரிவினர் கருதுகின்றார்கள். கரடிகளை அவர்கள் புனித விலங்குகளாக அல்லது அதீத சக்தி வாய்ந்த வழிபடத்தக்க விலங்குகளாக கண்டிருக்கின்றனர். ஜெர்மனியில் கிடைத்த நியாண்டர்தல்கள் வாழ்ந்த குகைகள் பலவற்றில் கரடிகளின் மண்டையோடுகள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளதை தொல்-மானுடவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். (சிப்பீவா (Chippewa) எனும் பூர்விக அமெரிக்கவாசிகள் கரடிகளை கொன்றபிறகு அவற்றின் தலைகளை வெட்டி பத்திரமாக வைத்து அதற்கு புகையிலை
நைவேதித்து அதனை கொல்ல நேர்ந்ததற்காக மன்னிப்பு கேட்டு பிரார்த்திக்கும் சடங்குகளை நிகழ்த்துவர். ஆக, ஈமச்சடங்குகள் மட்டுமல்ல புனிதத்துவ நம்பிக்கைகளும் சடங்குகளும் கூட இவர்களிடையே நிலவிவந்திருக்கின்றன. பனியுகத்தை மிகவும் வெற்றிகரமான தகவமைப்புகள் கொண்டிருந்த நியாண்டர்தல்கள், பனியுகம் முடிந்து புல்வெளி சமவெளிகள் உருவாக ஆரம்பித்த போது இவர்களை போன்ற மற்றொரு மானுட கூட்டம் மிகவும் வெற்றியடைய ஆரம்பித்திட நியாண்டர்தல்கள் மறைந்தனர்.

ஸ்லோவேனியாவின் நியாண்டர்தல் "புல்லாங்குழல்" இரண்டுவயது கரடியின் தொடை எலும்பிலிருந்து செய்யப்பட்டது. ஒருவேளை அவர்களே இசையை இறைச்சடங்கில் பயன்படுத்துவதிலும் நம் முன்னோடிகளாக இருந்திருக்கலாம்.

Sunday, March 29, 2009

இறையுதிர்காலம்-2 மனிதருக்கு முந்தைய ஆதி சடங்குகள்

இறையுணர்வின் தொடக்கங்களை ஆராய நாம் மனிதனின் பரிணாம வரலாற்றின் தொடக்கங்களிலிருந்து பார்க்க வேண்டும். இன்று நாம் மனிதன் என சொல்லும் உயிரினத்தின் விலங்கியல் பெயர் ஹோமோ ஸாப்பியன்ஸ் (Homo sapiens). இதில் ஸாப்பியன்ஸ் என்பது நம் உயிர்குழு அடிப்படைப்பிரிவின்- ஸ்பீஸீஸிஸின்-(species) பெயர். ஒரு species மற்றொரு species உடன் கலந்து வழித்தோன்றல்களை உருவாக்கமுடியாது. இதுவே ஸ்பீஷிஸின் வரையறை. இதற்கு மேலே இருக்கும் தொகுப்பு ஜீனஸ் (Genus). ஹோமோ நம் ஜீனஸ்.

இந்த ஜீனஸில் ஹோமோ எரெக்ட்டஸ் (Homo erectus) என்பதே முதன் முதலாக நெருப்பை கண்டுபிடித்தது. நம்முடன் -அதாவது ஹோமோ ஸாப்பியன்ஸுடன்- இணைந்து வாழ்ந்திருக்கக் கூடும் என மானுடபரிணாம வல்லுனர்கள் கருதுவது நியாண்டர்தல் எனும் மானுட இனத்தை. இது நம் மானுடக்குழுவில் ஒரு அங்கமா - அதாவது sub-species- அல்லது தனியான தன்னளவில் முழுமையான ஒரு தனி மானுட இனமாக இருக்குமா (separate species) என்னும் கேள்வி சில காலம் இருந்தது. இப்போது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்தின் படி நியாண்டர்தல்கள் தனி ஸ்பீஸிஸ் என்றே கருதப்படுகின்றனர். ஹோமோ நியாண்டர்தலென்ஸிஸ் (Homo neanderthalensis).

ஹோமோ எரெக்ட்டஸ் வாழ்ந்தது ஏறக்குறைய பத்து இலட்சத்து எண்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால். மானுட பரிமாணத்தில் முக்கிய கண்ணி ஹோமோ எரெக்ட்டஸ். : பல கண்டங்களுக்கு பரவி ஒரு பனியுகத்தை சமாளித்து, நெருப்பையும் கருவிகள் செய்யும் ஆற்றலையும் தம்மில் உருவாக்கிய ஹோமோ எரெக்ட்டஸ். அதன் அகபரிமாணத்தின் நிலை என்ன? ஹோமோ எரெக்ட்டஸின் பரிணாம பாதியின் ஒரு காலகட்டத்தில்தான் முதன்முதலாக மிக எளிமையான தொடக்கக்கால குறியீடுப்பயன்பாட்டுக்கான சாத்தியங்கள் உதயமாயிருக்க வேண்டுமென தொல்-மானுடவியலாளர்கள் கருதுகிறார்கள். இவையும் கூட மிகுந்த கடினமான ஒரு செயலாகவே இந்த மானுட முன்னோடிக்கு இருந்திருக்க வேண்டுமென பரிணாமவியலாளர்கள் ஊகிக்கிறார்கள்.

பீஜிங்கின் அருகில் ஹோமோ எரெக்ட்டஸ் மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட்டன. ஏறக்குறைய ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த மானுட முன்னோடிகளின் மண்டையோடுகள். இம்மண்டையோடுகள் கீழேயிருந்து உடைக்கப்பட்டிருப்பதை தொல்-மானுடவியலாளர்கள் கண்டார்கள். சடங்காக நரமாமிசம் உண்ணும் காட்டுவாசி சமுதாயங்களை ஆராய்ச்சி செய்த மானுடவியலாளர்கள் இந்த விதத்தில் மண்டையோடு உடைக்கப்படுவது அதனுள் இருக்கும் மூளையை சடங்கு ரீதியாக உண்ணுவதற்காக என்பதனை அறிவார்கள். ஹோமோ ஸேப்பியன்களில் - அதாவது நம்மில்- சக மனிதனின் மூளையை உண்பது அவனுடைய ஆத்மாவை அல்லது பலத்தை தன்னுடன் ஐக்கியப்படுத்தக்கூடிய சடங்காகும். இது எதிரிகளின் அல்லது கைப்பற்றப்பட்ட மற்றொரு குழுவை சேர்ந்தவருடையதாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. இறந்துவிட்ட உறவினர்கள் நல்லவர்கள் ஆகியோரது பிரசன்னம் தம்மோடு எப்போதும் இருக்க வைக்கும் உபாயமாக அவர்களது உடல் உறுப்புகளை உண்ணும் சடங்கு தொல்-பழம் சமூகங்களில் கருதப்பட்டது.

எத்தியோப்பியாவில் கண்டெடுக்கப்பட்ட எரெக்ட்டஸ் மண்டையோட்டில் அதன் தோல் உரிக்கப்பட்ட போது கல் ஆயுதங்களால் ஏற்பட்டதாக ஊகிக்கப்பட முடிந்த 25 வடுக்களை தொல்-மானுடவியலாளர்கள் கண்டறிந்தனர். மண்டை-முகத்தோல்களை உரிப்பதற்கு எவ்வித பயன்பாடும் இருக்கமுடியாது என்பதால் இதுவும் சடங்கு ரீதியிலான ஒரு விஷயமாகவே இருக்கவேண்டும். ஆக, தன்-இன மாமிசம் உண்ணும் பழக்கத்தின் எச்சங்கள் என ஊகிக்கவைக்கக் கூடிய சில கண்டுபிடிப்புகளே நாம் காணும் மிகப் பழமையான சடங்குகளாக இருந்திருக்க வேண்டும். இது சரியெனில் மதத்தின் பரிமாணவேர்கள் ஹோமோ எரெக்ட்டஸிலிருந்து தான் தொடங்குகிறது. அது மட்டுமல்ல, நம் வரலாற்றின் ஆகப்பழமையான மதச்சடங்காக நமக்கு கிடைத்திருப்பது தன்-இன மாமிசம் உண்பது : குறிப்பாக தலையை வெட்டி அதிலிருக்கும் மூளையை மட்டும் எடுத்து உண்பது: இவ்வாறு குறிப்பிட்ட உள் உறுப்பு மட்டும் மிகவும் கவனமாக எடுக்கப்படுவதென்பது அன்றாடப பசியாற்ற புசிப்பதல்ல. மாறாக சடங்காக நடத்தப்படுவது என்பது மானுடவியலாளர்களுக்கு மிகவும் பழக்காமன ஒரு கணிப்பு. இத்தகைய சடங்குகள் இன்றைக்கு நம்மை முகம் சுளிக்க வைக்கலாம். ஆனால் இன்று நாகரிகமடைந்த சமுதாயங்களிலும் இந்த சடங்குகள் அவற்றின் கடுமை நீக்கப்பட்டு குறியீட்டளவிலாவது எஞ்சி வாழ்வதை நாம் பிறகு பார்ப்போம். ஆனால் இதை தவிர நமக்கு ஹோமோ எரெக்ட்டஸில் மிகவும் தெளிவாக மதம் அல்லது இறை நம்பிக்கை குறித்து எதுவும் கிடைக்கவில்லை. நெருப்பை உருவாக்கும் முறை, கருவிகளை பயன்படுத்துதல், குகைகளில் வாழ்தல் ஆகிய பல முன்னோடி மானுட செயல்களினை கண்டுபிடித்த இந்த இனம் -ஒருவிதத்தில் சொன்னால் ப்ரோமிதியஸ்- சுய உணர்வு, மொழி, குறியீடுகளை பயன்படுத்தும் மனத்தன்மை ஆகியவற்றில் எத்தனை தூரம் முன்னேறியிருந்தது என்பதற்கு நம்மிடம் இந்த நிமிடம் வரை எவ்வித ஆதாரங்களும் (உதாரணமாக குகை ஓவியங்கள்) இல்லை. ஏறக்குறைய ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமோ எரெக்ட்டஸ் அழிந்துவிட்டது.

இப்போது நாம் பார்த்ததில் தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட மானுட முகத்தை ஒத்த செந்நிற கூழாங்கற்படிவத்தில் செய்யப்பட்ட உருவத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. முப்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படும் இதன் காலகணிப்பு உறுதி செய்யப்பட்டால் தொல்-பேரினக்குரங்குகளில் ஹோமோவுக்கு முந்தைய ஜீனஸான ஆஸ்ட்ரலோபைதிக்கஸின் (Australopithecus) தன்னுணர்வை வெளிக்காட்டும் ஆதாரமாக திகழக்கூடும். அல்லது ஹோமோக்களின் உதயம் இன்னும் பத்து இலட்சம் ஆண்டுகள் பின்னோக்கி செல்லக்கூடும். ஆனால் இன்றுவரை ஒரே ஒரு கண்டுபிடிப்பாக இது மட்டுமே திகழ்வதால் இதனை இப்போது எடுத்துக்கொள்ளமுடியாது. மேலும் ஹோமோ எரெக்ட்டஸின் சடங்கு-தன் இன மாமிசம் புசித்தல் குறித்தும் சில தீவிர விவாதங்கள் மானுடவியலாளரிடம் நிலவுகின்றன. இவை சடங்குக்காக இல்லாமல் உணவாகவே உண்ணப்பட்டிருக்கலாம் அல்லது மூளையை வெளியே எடுக்க மண்டையோடு அப்படி உடைக்கப்பட்டது என்பது வெறும் ஊகமாக இருக்கலாம் என்று வாதம் செய்யும் மானுடவியலாளரும் இருக்கிறார்கள். ஆனால் இன்று நாம் மனிதர் என்று அழைக்கும் உயிரினங்கள் உருவாவதற்கு முன்னரே மதத்துக்கான உயிரியல் தளம் உருவாகிவிட்டது என்பது உண்மை. இது இன்னும் உறுதிப்படுத்தப்படுவதும் இன்னும் சர்ச்சைக்குள்ளாவதும் நியாண்டர்தல்களில்.

இனி நியாண்டர்தல்களின் இறையுலகம்.

Friday, March 27, 2009

இறையுதிர்-காலம்-I: அறிவியலாளர் இருவரின் கடவுளர்


பொதுவாக அறிவியலும்-மதமும் என்று பேசும் எல்லா இறை நம்பிக்கையாளர்களும் மேற்கோள் காட்டும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மேற்கோள் ஒன்று உண்டு.
மதமில்லாத அறிவியல் முடமானது; அறிவியல் இல்லாத மதம் குருடானது.
ஆனால் இவர்கள் சொல்ல மறக்கும் விஷயம் ஐன்ஸ்டைனின் கடவுள் நம்பிக்கை எத்தகையது என்பது குறித்து. அவர் நிறுவன சமயத்தினை ஏற்றவரல்ல. 1954 இல் ஒரு தத்துவவியலாளருக்கு தாம் எழுதிய கடிதமொன்றில் ஐன்ஸ்டைன் குறிப்பிட்டார்:
என்னைப் பொறுத்தவரையில் இறைவன் எனும் வார்த்தை மானுட பலவீனத்தின் வெளிப்பாடுதான். விவிலியம் என்பது மதிப்பான ஆனால் ஆதிகால கதைகளின் தொகுப்பு. அவை மிகவும் குழந்தைத்தனமானவை. அதனை என்னதான் வியாக்கியானம் செய்தாலும் இந்த உண்மை என்னைப் பொறுத்தவரையில் மாறாது.
என்ற போதிலும் அடிக்கடி கடவுள் எனும் வார்த்தையை ஐன்ஸ்டைன் கவித்துவத்துடன் பயன்படுத்தினார். ஆனால் தான் கடவுள் என கூறுவது ஸ்பினோஸாவின் கடவுளை என கூறினார். யார் அது ஸ்பினோஸா? பாரூக் ஸ்பினோஸா பதினேழாம் நூற்றாண்டின் ஐரோப்பிய தத்துவஞானி. யூத குலத்தவர். ஆனால் அவரது தத்துவம் யூத இறையியலுக்கு எதிராக இருந்ததால் மதநீக்கம் செய்யப்பட்டவர். ஸ்பினோஸா இறையை இயற்கையிலிருந்து வேறுபடுத்தவில்லை. இறை என்பது மட்டுமே அனைத்து இருப்பாகவும் நாம் காணும் இயற்கை இறை எனும் பெருண்மையிலிருந்து எழும் அலையாகவுமே அவர் கண்டார். நாம் காணும் காரண-காரிய தொடர்புகள் எல்லாம் அந்தந்த குறுகிய வட்டத்துக்குள்ளேயே என்றும் அவை எல்லாம் மிகப்பெரியதோர் பிரபஞ்ச ஒழுங்கின் ஒரு பகுதி என்றும் அவர் கூறினார். ஸ்பினோஸாவின் இந்த இறை - நிர்க்குண இறை ஐன்ஸ்டைனின் அறிவியல் காட்டிய பிரபஞ்ச தரிசனத்துடன் ஒத்துப்போனது.

"கடவுள் இல்லை" (There is no God) என எழுதப்பட்ட ஒரு நூல் ஐன்ஸ்டைனுக்கு 1929 இல் அனுப்பப்பட்ட போது ஐன்ஸ்டைன் அந்த தலைப்பை "ஆளுமை கொண்ட கடவுள் இல்லை" (There is no personal God) என மாற்றினார். இவ்வாறு மாற்றிவிட்டு அவர் அந்த நூலின் ஆசிரியருக்கு எழுதினார்:

ஸ்பினோஸாவை பின்பற்றும் எம் போன்றோருக்கு கடவுள் என்பது அற்புதமான ஒழுங்கில் அதன் இதயத்தில் விளங்கும் ரிதத்தில், மனிதனிலும் விலங்குகளிலும் அது வெளிப்படும் விதத்தில் தென்படுவதாகும்.

மற்றொரு மிக முக்கியமான அடிப்படை உணர்வை குறித்தும் ஐன்ஸ்டைன் கூறுகிறார். அந்த உணர்வு "பிரபஞ்ச சமய உணர்வு" (cosmic religious consciousness) இதையே அவர் அனைத்து அறிவியலுக்கும் நல்ல கலைக்கும் அடிப்படையாக கூறுகிறார். பிரபஞ்சத்தினை நோக்கி விரிவடையும் அகம் குறித்த உணர்வு இது. காலமும் வெளியும் மகோன்னதமாக வெளியே விரிய அதனில் ஒரு ஒழுங்கை அறிய முயலும் அகத்தின் உணர்வு. அந்த ஒழுங்கினை அகத்திலும் உணருகையில் அது கலையாகவும் சமய அனுபவமாகவும் மாறுகிறது. புறத்தில் அது அறிவியலாகிறது. ஆனால் ஐன்ஸ்டைனுக்கும் மனக்கிலேசம் ஏற்படுத்தும் விதத்தில் அகமும் புறமும் பிரிந்து நிற்காமல் கலந்திடுவதும் அறிவியலில் ஏற்பட்டது. க்வாண்டம் இயற்பியலில்.

பொதுவாக அறிவியல் மேதை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஐன்ஸ்டைன்தான். ஆனால் ஐன்ஸ்டைன் போலவே நமது அறிதலில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் சார்லஸ் டார்வின். அவரது பரிணாம அறிவியல் போல நிறுவன மதங்களுக்கு சங்கடம் ஏற்படுத்தும் அறிவியல் புலம் பிறிதொன்றில்லை எனலாம். சார்லஸ் டார்வின் தன் வாழ்க்கையை மாற்றிய
உலகம் சுற்றும் கடல் பயணத்தை தொடங்கிய போது இறை நம்பிக்கையாளராகத்தான் இருந்தார். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நம்பிக்கை தகர்ந்து போக ஆரம்பித்தது. விவிலியம் கூறும் படைப்பு மற்றெந்த பண்பாட்டினுடையவும் படைப்பு கதை போன்ற வெறும் தொன்மகதைதான் என அவர் புரிந்து கொண்டார். தனது மத நம்பிக்கைகளை குறித்து நிறுவன மதங்களைச் சார்ந்தவர்களுக்கு அவரது பதில் சற்று கடுமையாகவே அமைந்தது:
மன்னிக்கவும். நான் விவிலியத்தை இறைவார்த்தையாக நம்பவில்லை. எனவே ஏசுவை தேவகுமாரனாகவும் கருதவில்லை.
தமது உயிரியல் ஆராய்ச்சியின் விளைவாக மட்டுமில்லாமல் தமது ஒழுக்கவியல் நிலைப்பாட்டின் அடிப்படையிலும் அவர் கிறிஸ்தவ இறையியலை தீர்க்கமாக நிராகரித்தார்:
'கிறிஸ்தவம் உண்மையான ஒரு மதமாக இருக்க முடியும் என ஒருவரால் எப்படி நினைக்கமுடியும் என்று கூட என்னால் கருதமுடியவில்லை. கிறிஸ்தவம் அதில்சொல்லியிருக்கும் வார்த்தைகளின் படி உண்மையானதென்றால், கிறிஸ்தவத்தை நம்பாத அனைவரும், என் தகப்பனார், என் சகோதரர், ஏறக்குறைய என் அணுக்க நண்பர்கள் அநனவரும் நிரந்தரமாக தண்டிக்கப்படுவார்கள். இது ஒரு வெறுக்கப்படவேண்டிய கோட்பாடாகும்."
நிறுவன மதத்தில் இந்த அளவு வெறுப்பை காட்டிய டார்வின் ஒரு கவித்துவமான
ஆன்மிக பார்வையை தம் அறிவியல் மூலமாக வந்தடைந்தார் என்பதுதான் முக்கியமான விஷயம்.
ஒரே ஆத்மா இந்த பூமி முழுவதும் பரந்துள்ளது...அதுவே பல்வேறு வடிவங்களை அதனினும் கீழான விதிகளின் படி எடுக்கிறது.

ஆனால் ஏன் இந்த இறைவன் மனிதர்களுக்கு தேவைப்படுகிறான்? ஏன் நிறுவன மதங்கள் அனைத்து சமுதாயங்களிலும் உள்ளன? ஒரு கத்தோலிக்க மடாலய பெண் துறவியும் ஒரு ஸென் பௌத்த துறவியும் ஒரு பாரத யோகியும் அடையும் ஆன்மிக அனுபவங்கள் எந்த அளவு ஒருவரிலிருந்து ஒருவருக்கு வேறுபடவும், ஒன்று போல இருக்கவும் செய்கின்றன? இவற்றுக்கெல்லாம் காரணங்கள் எங்கே இருக்கின்றன? நவீன இயற்பியல் காட்டும் பிரபஞ்சம் பரிணாம அறிவியல் சுட்டும் தோற்றக்காரணிகள் இவையெல்லாமாக நமக்கு கடவுளை குறித்து என்ன சொல்கின்றன? இனிவரும் இக்கட்டுரை தொடரில் நாம் காணலாம்.


Monday, March 23, 2009

உயிர்கள் : நூல் மதிப்பீடு


பள்ளிச்சிறுவர்களுக்கு உயிரியலில் ஆர்வம் ஊட்ட ஒரு சிறந்த நூலாக இது அமைந்துள்ளது. எளிய தமிழ். சுவாரசியமான நடை. உயிரியலின் அடிப்படைகளை ஆர்வமூட்டும் கேள்விகள் மூலமாக மாணவ சமுதாயத்துக்கு அறிமுகம் செய்கிறது இந்த நூல். இவ்விதத்தில் தமிழ் கூறும் நல்லுலகுக்கு இந்த நூல் ஒரு முக்கியமான நல்வரவுதான். பத்ரி சேஷாத்திரியால் எழுதப்பட்ட இந்த நூலே இந்த வலைப்பதிவை நான் ஆரம்பிப்பதற்கும் ஒரு உந்துதலாக இருந்தது. காரணம்...இந்த நூல் தவறவிட்டுள்ள தருணங்கள். குழந்தைகளின் மனதில் அறிவியல் காட்டும் விந்தை பேருலகைக் குறித்த ஆச்சரியத்தன்மையை ஏற்படுத்துவது ஒரு அற்புதமான விஷயம். அதை பத்ரி திறம்பட செய்திருக்கிறார். அவருக்கு மிகுந்த நன்றிகளை சொல்ல தமிழ் பெற்றோர்களாகிய நாம் கடமைப்பட்டிருக்கிறோம். என் பையனுக்கு "உயிர்கள்" வாங்கிக் கொடுத்து அவனுடன் அமர்ந்து வாசிக்கவும் செய்தேன். நீங்கள் ஆரம்பப்பள்ளி-நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களெனில், உங்கள் குழந்தைகளுக்கு இந்த நூலை கட்டாயமாக வாங்கிக்கொடுங்கள் என்று சிபாரிசும் செய்வேன். அடுத்த பதிப்பு இதைவிட சிறப்பாக வரவேண்டும் என்பதற்காகவே கீழே உள்ள "குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும்" தனமான விமர்சனங்கள்.இவற்றில் சிலதான் குறைபாடுகள் சிலதோ பரிந்துரைகள். குறைகள் குற்றம் கண்டுபிடிப்பதற்காக மட்டுமே அல்ல. நூல் ஆசிரியர் இதனை சரியான பார்வையில் எடுத்துக்கொண்டு அவற்றினை தமது அடுத்த பதிப்பில் சேர்ப்பார் என நம்புகிறேன்.

மதங்களில் படைப்பு கதைகள்: [பக். 5-7]
மிகவும் சரியாகவே ஆரம்பிக்கிறார் பத்ரி. எப்படி மதக்கதைகள் சிருஷ்டி குறித்த நம் பார்வையை பாதிக்கின்றன. அவை எப்படி மனத்தடையாகவும் அல்லது எளிதில் உள்வாங்க உதவி செய்யும் கருவியாகவும் அமைய முடியும் என்பதனை அவர் சொல்லாமல் சுட்டிக்காட்டுகிறார். இந்து 'மதத்தை' பொறுத்தவரையில், கிறிஸ்தவத்தையோ இஸ்லாமையோ போல அது ஒற்றைப் பார்வையில் படைப்பை விளக்கிடவில்லை. மாணவர்களுக்கு ரிக்வேதத்தின் நாசதீய சூத்திரத்தின் அழகிய வரிகளை எளிமையாகவாவது அறிமுகப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. சிருஷ்டியை எவ்வித இறைக் கோட்பாட்டாலும் விளக்கிடாமல் அதனை ஒரு திறந்த கேள்விக்கான பிரபஞ்ச மர்மமாகவே அவர்கள் மனதில் இந்த வரிகள் பதிக்க முடியும். விஷ்ணுபுரம் நாவலில் ஜெயமொகன் மிக அழகாக இந்த சிருஷ்டி கீதத்தை மொழி பெயர்த்திருக்கிறார். நம் மாணவர்களுக்கு திறந்த மனவெளியை அளிக்கும் இந்த பார்வை போய்
சேரவேண்டியது அவசியம். பத்ரி புத்தமதத்துக்கு மறுபிறப்பில் நம்பிக்கை கிடையாது என்கிறார். இது தவறானது.

லின்னயஸின் பாகுபாடு: [பக் 12-13]
கார்ல் லின்னயஸின் உயிர்கள் குறித்த பாகுபாட்டினை பத்ரி கூறுகிறார்: "16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உயிரினங்கள் அனைத்தையும் ஒரு தரத்தில் பெயரிட்டு அழைக்கும் முறை தொடங்கியது..இப்போது புழக்கத்தில் இருக்கும் பெயர்கள் ஸ்வீடனைச் சேர்ந்த கரோலஸ் லின்னயஸ் என்பவரால் கொடுக்கப்பட்டது." (பக்.13) பெயர்கள் அல்ல பெயரிடும் முறை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இதில் அடுத்த பதிப்பில் பத்ரி சொல்லவேண்டிய ஒரு விஷயமாக நான் கருதுவது ஒன்று உண்டு. பொதுவாகவே நம் குழந்தைகளுக்கு மீண்டும் மீண்டும் அறிவியல் என்பது என்னவோ ஐரோப்பாவிலேயே உருவாகி பரவிய ஒரு விஷயமாகத்தான் காட்டுகிறோம். இது தவறான வரலாற்று பார்வை. கார்ல் லின்னயஸின் உயிரியல் பாகுபாட்டின் சில மிக அடிப்படையான அமைப்புகள் கேரள மலப்புரத்தின் ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மூலிகையியலாளர்களிடமிருந்து பெறப்பட்டது. அறிவியல் வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் க்ரூவ் (Richard Grove) இந்த விஷயத்தை குறித்து மிகவும் விரிவாக எழுதியுள்ளார். லின்னயஸின் பகுப்பே இந்தியாவிலிருந்து சென்றது என சொல்லவில்லை. ஆனால் அறிவியலின் எழுச்சியே ஐரோப்பாவின் பண்பாட்டு மையத்திலிருந்து எழுந்து மற்ற இருண்ட கண்டங்களுக்கெல்லாம் ஒளியென பரவியது போல ஒரு சித்திரத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்கள். நாமும் அந்த படத்தின் வரிகளிலிருந்து சிறிதும் அங்கே இங்கே அசைந்திடாமல் நம் குழந்தைகளுக்கு அதே சித்திரத்தை பிரதி எடுக்கிறோம். இன்று லின்னயஸின் பாகுபாடு என நாம் அழைப்பது இந்திய பாரம்பரிய தாவரவியல் வகைப்பாட்டிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதனை கிழக்கு என பெயர் வைத்திருக்கும் பிரசுரமாவது குறைந்த பட்சம் சுட்டியாவது காட்டவேணும்.

விலங்குகளின் பாகுபாடு [பக்.29]
பைலங்களின் (Phyla) அடிப்படையில் விலங்குகளின் பாகுபாட்டினை பத்ரி எளிமையாக அந்தந்த பைலங்களில் உள்ள முக்கிய-மிகவும் தெரிந்த பிராணிகள் மூலம் விளக்கிச்செல்கிறார். இதிலுள்ள பிரச்சனை என்னவென்றால் சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட உயிர்களின் பொதுப்பெயர் அந்த பைலத்திலுள்ள மற்ற பிராணிகளையும் (படிப்பவர் மனதில்) பற்றிக்கொள்வதுதான். எண்டமாலஜி எனும் பூச்சியியலில் நுழையும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிதல் தடையை முதலில் நீக்குவார்கள் ஆசிரியர்கள். சிலந்திகள் பூச்சிகள் அல்ல. பூச்சி - insect என்பது இப்பூவுலகின் பரிணாமவரலாற்றிலேயே மிகவும் பிரதானமான - பரிணாம பாஷையில்- மிகவும் வெற்றிகரமான உயிரினத்தொகுப்பாகும். இவற்றை நாம் ஆறுகால்கள் கொண்ட ஒட்டுக்கணுக்களாலான கால்கள் கொண்ட முதுகுவடங்கள் அற்ற விலங்குகள் எனலாம். எல்லா பூச்சிகளும் ஆர்த்ரோபோடா பைலத்தை சார்ந்தவைதாம். ஆனால் எல்லா ஆர்த்ரோபோடாக்களும் பூச்சிகள் அல்ல. நண்டுகள் - crustaceans, சிலந்திகள் - arachnids, பூச்சிகள் - hexapoda (hexa-ஆறு poda-கால்கள்) அல்லது இன்ஸெக்டா : இவை எல்லாமே இன்னும் வேறுசிலவும் சேர்ந்து ஆர்த்ரோபோடாக்கள்தாம். சுவாரசியமான் ஒரு கொசுறு தகவல்: முதுகுவடம் இல்லாமல் பறக்கும் எந்த உயிரினத்தையும் கண்ணை மூடிக்கொண்டு hexapoda அதாவது பூச்சிகளில் சேர்த்துவிடலாம். ஆக. பூச்சிகள் என்றால் ஆறுகால்கள் கொண்டவை. எனவே Arthropodsஐ ஒட்டுமொத்தமாக பூச்சிகள் என சொல்வது (பக்.29) மாணவர்களுக்கு தவறான சித்திரத்தை வழங்கிவிடலாம். அதனை பின்னால் அவன் சரி செய்து கொள்ள வேண்டியிருக்கும். இல்லாமல் அவன் எண்டமாலஜி படிக்காமல் ஏரோனாட்டிக்கல் எஞ்சினியர் என போனால் வாழ்க்கை முழுவதும் நண்டும் சிலந்தியும் பூச்சிகள் என பத்ரி சேஷாத்ரி புண்ணியத்தால் நினைத்துக் கொண்டிருக்க கூடும். எனவே அடுத்த பதிப்பில் இந்த பைலத்தை "பூச்சிகள் சிலந்திகள் நண்டுகள்" என்றாவது சொல்ல வேண்டும். By the way JBS ஹால்டேன் எனும் புகழ்பெற்ற பரிணாம உயிரியலாளர் சொன்னாராம், கடவுள் என்று ஒருவர் இருந்தார் அவருக்கு பூச்சிகளிடம்தான் ரொம்ப இஷ்டம் என நான் சொல்வேன். அந்த அளவுக்கு பூச்சிகள் மிகவும் வெற்றிகரமான ஜந்துக்கள் பூமியின் வரலாற்றில்.

வைரஸ்களின் நியூக்ளியர் அமிலம்: [பக்.37]
"வைரஸ்களில் டி.என்.ஏக்கு பதிலாக ரிபோ நியூக்ளிக் ஆஸிட் (ஆர்.என்.ஏ) என்கிற வேதிப்பொருள் உள்ளது" என்கிறார் பத்ரி. தவறு. வைரஸ்களின் உயிரியல் பாகுபாடே அவற்றின் உள்ளே இருக்கும் ஜெனிடிக் வேதிப்பொருள் DNA ஆ அல்லது RNA ஆ என்பதனை அடிப்படையாக கொண்டது. ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலுக்கான வைரஸின் ஜெனிடிக் வேதி பொருள் DNA தான். பெரியம்மைக்கும் அப்படியே. ரிட்ரோ மற்றும் ரிபோ வகை வைரஸ்கள்தாம் RNA ஐ ஜெனிடிக் வேதிப்பொருளாக கொண்டவை. உதாரணமாக எயிட்ஸ் வைரஸில் இருப்பது RNA. இத்தகைய தகவல் பிழைகள் கவனக்குறைவாலோ அல்லது அலட்சியத்தாலோ ஏற்படுபவை. இது புத்தகத்தின் முழுமதிப்பையும் ஒரு அறிவார்ந்த மாணவனின் பார்வையில் குறைத்துவிடலாம். அல்லது நல்ல ஆசிரியர் இத்தகைய நூல்களை தம் மாணவர்களுக்கு பரிந்துரைக்க மாட்டார். நூலின் மற்ற நல்ல அம்சங்கள் இதனால் அடிபட்டு போகும்.

டி.என்.ஏ [பக்.44]
"டி.என்.ஏ என்பது ஒரு நீண்ட கரிம வேதிப்பொருள். இதில் நியூக்ளியோடைட் என்கிற சில சேர்மங்களூம், நியூக்ளியோபேஸ் என்கிற நான்கு சேர்மங்கள் - சைடோ சைன்(சை), குவானைன் (கு), அடினைன் (அ), தைமன் (தை) உள்ளன." இந்த வாசகத்தில் இருக்கும் இலக்கணப் பொருளின்மை ஒரு புறம் இருக்கட்டும். பிரசித்தி பெற்ற டி.என்.ஏயின் அமைப்பை குறித்த ஒரு அடிப்படை புரிதலின்மையை இந்த வாசகம் காட்டுகிறது என்பதும் அத்தகைய வாசகம் பத்ரியால் எழுதப்பட்டது என்பதும்தான் சோகம். நியூக்ளியோடைட் என்பது நியூக்ளிக் அமிலத்தின் அடிப்படை கட்டமைப்பு பாகம். நியோக்ளியோடைட் என்பது ரிபோஸ் எனும் ஐந்து கார்பன்கள் கொண்ட பெண்டோ ஸ் மூலக்கூறு, அதனுடன் இணைந்த நியூக்ளியோபேஸ்கள் ஆகியவற்றாலும் பின்னர் இந்த கூட்டமைப்புக்கு ஒரு சார்வு பிணைப்பினை அளிக்கும் பாஸ்போரிக் அமில மூலக்கூறால் இணைக்கப்பட்டும் உருவாக்கப்படும். ஆக "நியூக்ளியோடைட் என்கிற சில சேர்மங்களும் நியூக்ளியோபேஸ் என்கிற நான்கு சேர்மங்கள்" DNA இல் இருப்பதாக சொல்வது, "இந்த அறை சுவர்களாலும் செங்கற்களாலும் செய்யப்பட்டது" என சொல்வதைப் போல பொருளுடையது. நியூக்ளியோபேஸ்கள் நியூக்ளியோடைட் அமைப்பின் ஒரு பகுதி. மீண்டும் மீண்டும் நியூக்ளியோடைட் அடுக்குகள் பாஸ்போரிக் அமில இழைகளில் கோர்க்கப்பட்டு இத்தகைய இரு இழைகள் பேஸ்களினிடையே ஏற்படும் ஹைட்ரஜன் இணைப்புகளால் நம் மனதில் இன்று நன்றாக பதிந்திருக்கும் டி.என்.ஏ மூலக்கூறு வடிவமாகிறது. இந்த இடத்தில் பத்ரி எத்தனையோ சுவாரசியமான விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்ல கிடைக்கும் வாய்ப்புகளை இழக்கிறார். ஏதோ மட்டமான அரசு பாடத்திட்ட உயிரியல் நூலின் சாரமற்ற நடை. சிறிதே இந்த இடத்தை மாற்றி எழுதிப் பார்க்கலாம்.

"சில கட்டிடங்களில் ஒரு அச்சினை சுற்றி சுழன்று செல்லும் படிக்கட்டுக்களை பார்த்திருப்பீர்கள். இதனை ஹெலிக்ஸ் என சொல்லுவார்கள். இதே போல கண்ணுக்கு தெரியாத ஒரு அச்சினை சுற்றிச்சுழலும் இரண்டு ஹெலிக்ஸ்களை கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த இரண்டு ஹெலிக்ஸுகளுக்கு இடையே ஏணிப்படிகள் போன்ற பிணைப்புகளையும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இதுதான் டி.என்.ஏ மூலக்கூறின் வடிவம். இந்த டி.என்.ஏ என்பதில் என்னவெல்லாம் இருக்கிறது. எப்படி ஒரு சுவர் ஒரே மாதிரியான செங்கற்களை அடிக்கி வைப்பதால் உருவாகிறதோ அது போல இந்த பெரிய மூலக்கூறும் சில அடிப்படையான அடுக்குகளால் உருவாகுகியுள்ளது. அந்த அடிப்படை செங்கலின் பெயர் நியூக்ளியோடைட். ஒரு நியூக்ளியோடைட் என்பதில் ஐந்து கார்பன்களால் ஆன சர்க்கரை (இதனை ரிபோஸ் என்பார்கள்) அதன் ஒரு பகுதியில் நியூக்ளியோபேஸ் என்கிற ஒரு சமாச்சாரம் ஆகியவை உள்ளன. இதே போல அடுத்த இழையிலும் ஒரு ஐந்து கார்பன் சர்க்கரை அதனுடன் ஒரு நியூக்ளியோபேஸ். இந்த இரண்டு இழைகளிலும் உள்ள நியூக்ளியோ பேஸ்கள் இருக்கின்றனவே அவை ஒன்றோடொன்று ஒரு பிணைப்பினை உருவாக்குகின்றன. இதுவும் கண்ணுக்கு தெரியாதுதான். இந்த பிணைப்புக்கு பெயர் ஹைட்ரஜன் பிணைப்பு. ஒவ்வொரு இழையிலும் உள்ள சர்க்கரைகளை இணைப்பது பாப்போரிக் அமில இழை. இந்த இரட்டை ஹெலிக்ஸ்களில் ஒவ்வொரு ஹெலிக்ஸுக்கும் முதுகெலும்பாக விளங்குவது இந்த பார்ப்போரிக் அமில இழைதான். ஆனால் டி.என்,ஏயின் மாயஜாலம் அதன் நியூக்ளிக் அமிலங்களில் உள்ளது. இரண்டு இழைகளிலும் இரண்டு நியூக்ளியோ பேஸ்களுக்குள் பிணைப்பு ஏற்படுகிறது என்று பார்த்தோமில்லையா...இந்த பிணைப்புக்கு விதிகள் இருக்கின்றன. இந்த நியூக்ளியோபேஸ்கள் நான்கு - அடினைன் க்வானைன் சைட்டோ ஸின் தயாமின். இந்த நான்கு பேஸ்களையும் இருவிதமாக பிரிக்கலாம். ப்யூரின்கள் பைரிமிடின்கள். இவற்றில் ப்யூரின்கள் என்பவை அடினைனும் க்வானைனும் மற்ற இரண்டும் பைரிமிடின்கள். இப்போது டி.என்.ஏ மூலக்கூறில் இரண்டு ஹெலிக்ஸுகளும் ஜோடி சேரும் போது ஒரு இழையிலுள்ள ப்யூரின் மற்றொரு இழையில் பைரிமிடினுடன்தான் ஜோடி சேரும். அடினைன் தையாமினுடனும் க்வானைன் சைடோ சைனுடனும் பொதுவாக ஜோடி சேரும். ஆக நமக்கு இப்போது நான்கு எழுத்துக்களும் அவற்றினை இணைக்க ஒரு இலக்கணவிதியும் கிடைத்துவிட்டதல்லவா? எப்படி தந்தியில் ஒன்றிரண்டு டக்கு டக்குகளை வைத்து செய்தித்தொடர்களை உருவாக்குகிறோமோ அதே போல இயற்கையும் இந்த நாலு எழுத்துக்களையும் இந்த இலக்கணவிதியையும் வைத்து உயிர் எனும் பெரிய காவியத்தை படைத்துவிட்டது. அதில்தான் எத்தனை எத்தனை முடிவில்லாத அத்தியாயங்கள்..."
இந்த நூல் தொடும் விஷயம் முக்கியமானது. எனவே அடுத்த பதிப்பினை சிறந்ததாக்க ஆசிரியருக்கும் பதிப்பகத்துக்கும் சில suggestions:
1. உயிர்களின் தோற்றம் குறித்து அடிப்படை ஆராய்ச்சிகளை நூல் குறிப்பிடவேண்டும். ஒபாரின்-கருதுகோள் யூரெ மில்லர் பரிசோதனை குறித்து பேசாத ஒரு நூல் அது குழந்தைகளுக்கான நூல் என்றாலும் கூட - முழுமை பெறாமல்தான் இருக்கும். கூடவே அண்மை காலங்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய வளிமண்டல நுண்ணுயிரிகள் கண்டுபிடிப்பு பான்ஸ்பெர்மியா கோட்பாடு ஆகியவற்றை குறிப்பிடலாம்.
2. அதிக படங்கள்: டி.என்.ஏ மூலக்கூறு, டார்வின், சில டைனோசார்கள், ஆதி-கரிமக்கடல், சில நுண்ணுயிரிகள் ஆகியவற்றின் படங்கள். அதிகமில்லை சிறியதாக பத்து படங்களாவது இருக்க வேண்டும்.
3. நூலின் அமைப்பு: Nothing in biology makes sense except in the light of evolution என்று உயிரியல் ஆசிரியர்களுக்கு கூறினார் தியோடாஸியஸ் தொப்ஸான்ஸ்கி எனும் புகழ்பெற்ற உயிரியலாளர். ஆனால் ஒரு சீரிய ஒழுங்கு நூலில் இல்லை. பின்வரும் விதமாக அத்தியாயங்கள் அமைக்கப்படுவதை குறித்து ஆசிரியர் யோசிக்க வேணும்:

அ) உயிர் எப்படி தோன்றியது?
i) பிரபஞ்சம் -> சூரியக்குடும்பம் -> பூமி
ii) உயிரின் தோற்றம்: தொன்மங்கள்; அலெக்ஸாண்டர் ஒப்பாரின்; யூரே முல்லர் பரிசோதனை; பான்ஸ்பெர்மியா; ஐஸ்ரோ பரிசோதனை
iii) வேறு கிரகங்களில் உயிரினங்கள் உண்டா

ஆ) உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி
i) ஆல்கே முதல் ஆதி மனிதன் வரை உயிர்களின் சுருக்கமான வரலாறு
ii) டார்வின்
iii) மரபணுவியல்
iv) நவ-டார்வினிய கோட்பாடு
v) உலகம் எனும் பேருயிரி: Gaia

இ) நாம் காணும் உயிர் மண்டலம்
i) தாவரங்கள்
ii) விலங்குகள்
iii) நுண்ணுயிரிகள்

ஈ) உயிரின் எதிர்காலம்
பத்ரியின் உயிர்கள் நூலின் contentஐயே இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தி மேலே சொன்ன கட்டமைப்புக்குள் கொண்டு வந்தால் உயிர்கள் நிச்சயம் சிறுவர்களுக்கான அறிவியல் நூல்களில் ஒரு மைல்கல்லாக விளங்கும்.

உயிர்கள் எப்படித் தோன்றின?
பத்ரி சேஷாத்ரி
ப்ராடிஜி பதிப்பகம், 2007
விலை ரூ 25