Friday, March 27, 2009

இறையுதிர்-காலம்-I: அறிவியலாளர் இருவரின் கடவுளர்


பொதுவாக அறிவியலும்-மதமும் என்று பேசும் எல்லா இறை நம்பிக்கையாளர்களும் மேற்கோள் காட்டும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மேற்கோள் ஒன்று உண்டு.
மதமில்லாத அறிவியல் முடமானது; அறிவியல் இல்லாத மதம் குருடானது.
ஆனால் இவர்கள் சொல்ல மறக்கும் விஷயம் ஐன்ஸ்டைனின் கடவுள் நம்பிக்கை எத்தகையது என்பது குறித்து. அவர் நிறுவன சமயத்தினை ஏற்றவரல்ல. 1954 இல் ஒரு தத்துவவியலாளருக்கு தாம் எழுதிய கடிதமொன்றில் ஐன்ஸ்டைன் குறிப்பிட்டார்:
என்னைப் பொறுத்தவரையில் இறைவன் எனும் வார்த்தை மானுட பலவீனத்தின் வெளிப்பாடுதான். விவிலியம் என்பது மதிப்பான ஆனால் ஆதிகால கதைகளின் தொகுப்பு. அவை மிகவும் குழந்தைத்தனமானவை. அதனை என்னதான் வியாக்கியானம் செய்தாலும் இந்த உண்மை என்னைப் பொறுத்தவரையில் மாறாது.
என்ற போதிலும் அடிக்கடி கடவுள் எனும் வார்த்தையை ஐன்ஸ்டைன் கவித்துவத்துடன் பயன்படுத்தினார். ஆனால் தான் கடவுள் என கூறுவது ஸ்பினோஸாவின் கடவுளை என கூறினார். யார் அது ஸ்பினோஸா? பாரூக் ஸ்பினோஸா பதினேழாம் நூற்றாண்டின் ஐரோப்பிய தத்துவஞானி. யூத குலத்தவர். ஆனால் அவரது தத்துவம் யூத இறையியலுக்கு எதிராக இருந்ததால் மதநீக்கம் செய்யப்பட்டவர். ஸ்பினோஸா இறையை இயற்கையிலிருந்து வேறுபடுத்தவில்லை. இறை என்பது மட்டுமே அனைத்து இருப்பாகவும் நாம் காணும் இயற்கை இறை எனும் பெருண்மையிலிருந்து எழும் அலையாகவுமே அவர் கண்டார். நாம் காணும் காரண-காரிய தொடர்புகள் எல்லாம் அந்தந்த குறுகிய வட்டத்துக்குள்ளேயே என்றும் அவை எல்லாம் மிகப்பெரியதோர் பிரபஞ்ச ஒழுங்கின் ஒரு பகுதி என்றும் அவர் கூறினார். ஸ்பினோஸாவின் இந்த இறை - நிர்க்குண இறை ஐன்ஸ்டைனின் அறிவியல் காட்டிய பிரபஞ்ச தரிசனத்துடன் ஒத்துப்போனது.

"கடவுள் இல்லை" (There is no God) என எழுதப்பட்ட ஒரு நூல் ஐன்ஸ்டைனுக்கு 1929 இல் அனுப்பப்பட்ட போது ஐன்ஸ்டைன் அந்த தலைப்பை "ஆளுமை கொண்ட கடவுள் இல்லை" (There is no personal God) என மாற்றினார். இவ்வாறு மாற்றிவிட்டு அவர் அந்த நூலின் ஆசிரியருக்கு எழுதினார்:

ஸ்பினோஸாவை பின்பற்றும் எம் போன்றோருக்கு கடவுள் என்பது அற்புதமான ஒழுங்கில் அதன் இதயத்தில் விளங்கும் ரிதத்தில், மனிதனிலும் விலங்குகளிலும் அது வெளிப்படும் விதத்தில் தென்படுவதாகும்.

மற்றொரு மிக முக்கியமான அடிப்படை உணர்வை குறித்தும் ஐன்ஸ்டைன் கூறுகிறார். அந்த உணர்வு "பிரபஞ்ச சமய உணர்வு" (cosmic religious consciousness) இதையே அவர் அனைத்து அறிவியலுக்கும் நல்ல கலைக்கும் அடிப்படையாக கூறுகிறார். பிரபஞ்சத்தினை நோக்கி விரிவடையும் அகம் குறித்த உணர்வு இது. காலமும் வெளியும் மகோன்னதமாக வெளியே விரிய அதனில் ஒரு ஒழுங்கை அறிய முயலும் அகத்தின் உணர்வு. அந்த ஒழுங்கினை அகத்திலும் உணருகையில் அது கலையாகவும் சமய அனுபவமாகவும் மாறுகிறது. புறத்தில் அது அறிவியலாகிறது. ஆனால் ஐன்ஸ்டைனுக்கும் மனக்கிலேசம் ஏற்படுத்தும் விதத்தில் அகமும் புறமும் பிரிந்து நிற்காமல் கலந்திடுவதும் அறிவியலில் ஏற்பட்டது. க்வாண்டம் இயற்பியலில்.

பொதுவாக அறிவியல் மேதை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஐன்ஸ்டைன்தான். ஆனால் ஐன்ஸ்டைன் போலவே நமது அறிதலில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் சார்லஸ் டார்வின். அவரது பரிணாம அறிவியல் போல நிறுவன மதங்களுக்கு சங்கடம் ஏற்படுத்தும் அறிவியல் புலம் பிறிதொன்றில்லை எனலாம். சார்லஸ் டார்வின் தன் வாழ்க்கையை மாற்றிய
உலகம் சுற்றும் கடல் பயணத்தை தொடங்கிய போது இறை நம்பிக்கையாளராகத்தான் இருந்தார். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நம்பிக்கை தகர்ந்து போக ஆரம்பித்தது. விவிலியம் கூறும் படைப்பு மற்றெந்த பண்பாட்டினுடையவும் படைப்பு கதை போன்ற வெறும் தொன்மகதைதான் என அவர் புரிந்து கொண்டார். தனது மத நம்பிக்கைகளை குறித்து நிறுவன மதங்களைச் சார்ந்தவர்களுக்கு அவரது பதில் சற்று கடுமையாகவே அமைந்தது:
மன்னிக்கவும். நான் விவிலியத்தை இறைவார்த்தையாக நம்பவில்லை. எனவே ஏசுவை தேவகுமாரனாகவும் கருதவில்லை.
தமது உயிரியல் ஆராய்ச்சியின் விளைவாக மட்டுமில்லாமல் தமது ஒழுக்கவியல் நிலைப்பாட்டின் அடிப்படையிலும் அவர் கிறிஸ்தவ இறையியலை தீர்க்கமாக நிராகரித்தார்:
'கிறிஸ்தவம் உண்மையான ஒரு மதமாக இருக்க முடியும் என ஒருவரால் எப்படி நினைக்கமுடியும் என்று கூட என்னால் கருதமுடியவில்லை. கிறிஸ்தவம் அதில்சொல்லியிருக்கும் வார்த்தைகளின் படி உண்மையானதென்றால், கிறிஸ்தவத்தை நம்பாத அனைவரும், என் தகப்பனார், என் சகோதரர், ஏறக்குறைய என் அணுக்க நண்பர்கள் அநனவரும் நிரந்தரமாக தண்டிக்கப்படுவார்கள். இது ஒரு வெறுக்கப்படவேண்டிய கோட்பாடாகும்."
நிறுவன மதத்தில் இந்த அளவு வெறுப்பை காட்டிய டார்வின் ஒரு கவித்துவமான
ஆன்மிக பார்வையை தம் அறிவியல் மூலமாக வந்தடைந்தார் என்பதுதான் முக்கியமான விஷயம்.
ஒரே ஆத்மா இந்த பூமி முழுவதும் பரந்துள்ளது...அதுவே பல்வேறு வடிவங்களை அதனினும் கீழான விதிகளின் படி எடுக்கிறது.

ஆனால் ஏன் இந்த இறைவன் மனிதர்களுக்கு தேவைப்படுகிறான்? ஏன் நிறுவன மதங்கள் அனைத்து சமுதாயங்களிலும் உள்ளன? ஒரு கத்தோலிக்க மடாலய பெண் துறவியும் ஒரு ஸென் பௌத்த துறவியும் ஒரு பாரத யோகியும் அடையும் ஆன்மிக அனுபவங்கள் எந்த அளவு ஒருவரிலிருந்து ஒருவருக்கு வேறுபடவும், ஒன்று போல இருக்கவும் செய்கின்றன? இவற்றுக்கெல்லாம் காரணங்கள் எங்கே இருக்கின்றன? நவீன இயற்பியல் காட்டும் பிரபஞ்சம் பரிணாம அறிவியல் சுட்டும் தோற்றக்காரணிகள் இவையெல்லாமாக நமக்கு கடவுளை குறித்து என்ன சொல்கின்றன? இனிவரும் இக்கட்டுரை தொடரில் நாம் காணலாம்.


5 comments:

  1. வாவ்.. அட்டகாசமான ஆரம்பமாய் இருக்கிறது. இந்து மதக் கோட்பாடான எல்லா உயிரிலும் இறைவன் கலந்திருக்கிறான் என்ற தத்துவத்தைக் கிட்டத்தட்ட பிடித்து விட்டதுபோலல்லவா இருக்கிறது டார்வினின் நிலைப்பாடு. ??

    அடுத்த கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. தொடருங்கள். ஆனால் டார்வின் பீகிள் பயணத்தைத் தொடரும்போது இறை நம்பிக்கையாளராக இருந்தார் என்பது ஏற்கமுடியாதது. சரியான மேற்கோள்களை முடிந்தால் நாளை தருகிறேன். டார்வினுக்கு ஆங்க்லிகன் கிறித்துவம், அவர்களிடையே நிலவிவந்த கிறித்துவக் கோட்பாடு ஆகியவற்றின்மீது கல்லூரிக் காலத்திலேயே நம்பிக்கை போய்விட்டது. டார்வினின் தாத்தா எராஸ்மஸ் ஒரு நாத்திகர் என்றே சொல்லலாம். டார்வினின் அப்பா, சார்லஸ் டார்வின் எதற்கும் லாயக்கற்றவர் (மருத்துவராக, வக்கீலாகப் போகமுடியாதவர்) என்பதால்தான் ஒரு சர்ச் பாதிரியாகவாவது போய்த் தொலை என்றார் - அதில் உள்ள பணம் மற்றும் மரியாதைக்காக. ஆனால் டார்வினால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  3. கானகம், கால்கரி சிவா, நன்றி.
    பத்ரி, டார்வினே தன் சுயசரிதையில் தான் பீகிளில் சென்ற போது ஆச்சாரவாதியாக ("Whilst on board the Beagle (October 1836-January 1839...") I was quite orthodox) அவர் ஒழுக்க ரீதியான விஷயங்களுக்கு ஆதாரமாக விவிலிய மேற்கோள்களை கூறுவது உடன்வந்த கப்பல் தொழிலாளர்களுக்கு வேடிக்கையாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். ஆனால் இதே காலகட்டத்தில் மெல்ல மெல்ல தாம் கிறிஸ்தவ படைப்பு விவரணம் ஒரு இந்து புனித நூலின் படைப்பு புராணக்கதையையோ அல்லது ஏதாவது காட்டுவாசிகளின் நம்பிக்கைகளையோ போல நம்ப முடியாத ஒன்று என்கிற முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிடுகிறார். இது அவரது சுயசரிதையில் அவரது வார்த்தைகளிலேயே உள்ளது.

    ReplyDelete
  4. அருமையான தொடக்கம். தொடர்ந்து படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

    நடராஜன்.

    ReplyDelete