Monday, March 23, 2009

உயிர்கள் : நூல் மதிப்பீடு


பள்ளிச்சிறுவர்களுக்கு உயிரியலில் ஆர்வம் ஊட்ட ஒரு சிறந்த நூலாக இது அமைந்துள்ளது. எளிய தமிழ். சுவாரசியமான நடை. உயிரியலின் அடிப்படைகளை ஆர்வமூட்டும் கேள்விகள் மூலமாக மாணவ சமுதாயத்துக்கு அறிமுகம் செய்கிறது இந்த நூல். இவ்விதத்தில் தமிழ் கூறும் நல்லுலகுக்கு இந்த நூல் ஒரு முக்கியமான நல்வரவுதான். பத்ரி சேஷாத்திரியால் எழுதப்பட்ட இந்த நூலே இந்த வலைப்பதிவை நான் ஆரம்பிப்பதற்கும் ஒரு உந்துதலாக இருந்தது. காரணம்...இந்த நூல் தவறவிட்டுள்ள தருணங்கள். குழந்தைகளின் மனதில் அறிவியல் காட்டும் விந்தை பேருலகைக் குறித்த ஆச்சரியத்தன்மையை ஏற்படுத்துவது ஒரு அற்புதமான விஷயம். அதை பத்ரி திறம்பட செய்திருக்கிறார். அவருக்கு மிகுந்த நன்றிகளை சொல்ல தமிழ் பெற்றோர்களாகிய நாம் கடமைப்பட்டிருக்கிறோம். என் பையனுக்கு "உயிர்கள்" வாங்கிக் கொடுத்து அவனுடன் அமர்ந்து வாசிக்கவும் செய்தேன். நீங்கள் ஆரம்பப்பள்ளி-நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களெனில், உங்கள் குழந்தைகளுக்கு இந்த நூலை கட்டாயமாக வாங்கிக்கொடுங்கள் என்று சிபாரிசும் செய்வேன். அடுத்த பதிப்பு இதைவிட சிறப்பாக வரவேண்டும் என்பதற்காகவே கீழே உள்ள "குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும்" தனமான விமர்சனங்கள்.இவற்றில் சிலதான் குறைபாடுகள் சிலதோ பரிந்துரைகள். குறைகள் குற்றம் கண்டுபிடிப்பதற்காக மட்டுமே அல்ல. நூல் ஆசிரியர் இதனை சரியான பார்வையில் எடுத்துக்கொண்டு அவற்றினை தமது அடுத்த பதிப்பில் சேர்ப்பார் என நம்புகிறேன்.

மதங்களில் படைப்பு கதைகள்: [பக். 5-7]
மிகவும் சரியாகவே ஆரம்பிக்கிறார் பத்ரி. எப்படி மதக்கதைகள் சிருஷ்டி குறித்த நம் பார்வையை பாதிக்கின்றன. அவை எப்படி மனத்தடையாகவும் அல்லது எளிதில் உள்வாங்க உதவி செய்யும் கருவியாகவும் அமைய முடியும் என்பதனை அவர் சொல்லாமல் சுட்டிக்காட்டுகிறார். இந்து 'மதத்தை' பொறுத்தவரையில், கிறிஸ்தவத்தையோ இஸ்லாமையோ போல அது ஒற்றைப் பார்வையில் படைப்பை விளக்கிடவில்லை. மாணவர்களுக்கு ரிக்வேதத்தின் நாசதீய சூத்திரத்தின் அழகிய வரிகளை எளிமையாகவாவது அறிமுகப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. சிருஷ்டியை எவ்வித இறைக் கோட்பாட்டாலும் விளக்கிடாமல் அதனை ஒரு திறந்த கேள்விக்கான பிரபஞ்ச மர்மமாகவே அவர்கள் மனதில் இந்த வரிகள் பதிக்க முடியும். விஷ்ணுபுரம் நாவலில் ஜெயமொகன் மிக அழகாக இந்த சிருஷ்டி கீதத்தை மொழி பெயர்த்திருக்கிறார். நம் மாணவர்களுக்கு திறந்த மனவெளியை அளிக்கும் இந்த பார்வை போய்
சேரவேண்டியது அவசியம். பத்ரி புத்தமதத்துக்கு மறுபிறப்பில் நம்பிக்கை கிடையாது என்கிறார். இது தவறானது.

லின்னயஸின் பாகுபாடு: [பக் 12-13]
கார்ல் லின்னயஸின் உயிர்கள் குறித்த பாகுபாட்டினை பத்ரி கூறுகிறார்: "16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உயிரினங்கள் அனைத்தையும் ஒரு தரத்தில் பெயரிட்டு அழைக்கும் முறை தொடங்கியது..இப்போது புழக்கத்தில் இருக்கும் பெயர்கள் ஸ்வீடனைச் சேர்ந்த கரோலஸ் லின்னயஸ் என்பவரால் கொடுக்கப்பட்டது." (பக்.13) பெயர்கள் அல்ல பெயரிடும் முறை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இதில் அடுத்த பதிப்பில் பத்ரி சொல்லவேண்டிய ஒரு விஷயமாக நான் கருதுவது ஒன்று உண்டு. பொதுவாகவே நம் குழந்தைகளுக்கு மீண்டும் மீண்டும் அறிவியல் என்பது என்னவோ ஐரோப்பாவிலேயே உருவாகி பரவிய ஒரு விஷயமாகத்தான் காட்டுகிறோம். இது தவறான வரலாற்று பார்வை. கார்ல் லின்னயஸின் உயிரியல் பாகுபாட்டின் சில மிக அடிப்படையான அமைப்புகள் கேரள மலப்புரத்தின் ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மூலிகையியலாளர்களிடமிருந்து பெறப்பட்டது. அறிவியல் வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் க்ரூவ் (Richard Grove) இந்த விஷயத்தை குறித்து மிகவும் விரிவாக எழுதியுள்ளார். லின்னயஸின் பகுப்பே இந்தியாவிலிருந்து சென்றது என சொல்லவில்லை. ஆனால் அறிவியலின் எழுச்சியே ஐரோப்பாவின் பண்பாட்டு மையத்திலிருந்து எழுந்து மற்ற இருண்ட கண்டங்களுக்கெல்லாம் ஒளியென பரவியது போல ஒரு சித்திரத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்கள். நாமும் அந்த படத்தின் வரிகளிலிருந்து சிறிதும் அங்கே இங்கே அசைந்திடாமல் நம் குழந்தைகளுக்கு அதே சித்திரத்தை பிரதி எடுக்கிறோம். இன்று லின்னயஸின் பாகுபாடு என நாம் அழைப்பது இந்திய பாரம்பரிய தாவரவியல் வகைப்பாட்டிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதனை கிழக்கு என பெயர் வைத்திருக்கும் பிரசுரமாவது குறைந்த பட்சம் சுட்டியாவது காட்டவேணும்.

விலங்குகளின் பாகுபாடு [பக்.29]
பைலங்களின் (Phyla) அடிப்படையில் விலங்குகளின் பாகுபாட்டினை பத்ரி எளிமையாக அந்தந்த பைலங்களில் உள்ள முக்கிய-மிகவும் தெரிந்த பிராணிகள் மூலம் விளக்கிச்செல்கிறார். இதிலுள்ள பிரச்சனை என்னவென்றால் சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட உயிர்களின் பொதுப்பெயர் அந்த பைலத்திலுள்ள மற்ற பிராணிகளையும் (படிப்பவர் மனதில்) பற்றிக்கொள்வதுதான். எண்டமாலஜி எனும் பூச்சியியலில் நுழையும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிதல் தடையை முதலில் நீக்குவார்கள் ஆசிரியர்கள். சிலந்திகள் பூச்சிகள் அல்ல. பூச்சி - insect என்பது இப்பூவுலகின் பரிணாமவரலாற்றிலேயே மிகவும் பிரதானமான - பரிணாம பாஷையில்- மிகவும் வெற்றிகரமான உயிரினத்தொகுப்பாகும். இவற்றை நாம் ஆறுகால்கள் கொண்ட ஒட்டுக்கணுக்களாலான கால்கள் கொண்ட முதுகுவடங்கள் அற்ற விலங்குகள் எனலாம். எல்லா பூச்சிகளும் ஆர்த்ரோபோடா பைலத்தை சார்ந்தவைதாம். ஆனால் எல்லா ஆர்த்ரோபோடாக்களும் பூச்சிகள் அல்ல. நண்டுகள் - crustaceans, சிலந்திகள் - arachnids, பூச்சிகள் - hexapoda (hexa-ஆறு poda-கால்கள்) அல்லது இன்ஸெக்டா : இவை எல்லாமே இன்னும் வேறுசிலவும் சேர்ந்து ஆர்த்ரோபோடாக்கள்தாம். சுவாரசியமான் ஒரு கொசுறு தகவல்: முதுகுவடம் இல்லாமல் பறக்கும் எந்த உயிரினத்தையும் கண்ணை மூடிக்கொண்டு hexapoda அதாவது பூச்சிகளில் சேர்த்துவிடலாம். ஆக. பூச்சிகள் என்றால் ஆறுகால்கள் கொண்டவை. எனவே Arthropodsஐ ஒட்டுமொத்தமாக பூச்சிகள் என சொல்வது (பக்.29) மாணவர்களுக்கு தவறான சித்திரத்தை வழங்கிவிடலாம். அதனை பின்னால் அவன் சரி செய்து கொள்ள வேண்டியிருக்கும். இல்லாமல் அவன் எண்டமாலஜி படிக்காமல் ஏரோனாட்டிக்கல் எஞ்சினியர் என போனால் வாழ்க்கை முழுவதும் நண்டும் சிலந்தியும் பூச்சிகள் என பத்ரி சேஷாத்ரி புண்ணியத்தால் நினைத்துக் கொண்டிருக்க கூடும். எனவே அடுத்த பதிப்பில் இந்த பைலத்தை "பூச்சிகள் சிலந்திகள் நண்டுகள்" என்றாவது சொல்ல வேண்டும். By the way JBS ஹால்டேன் எனும் புகழ்பெற்ற பரிணாம உயிரியலாளர் சொன்னாராம், கடவுள் என்று ஒருவர் இருந்தார் அவருக்கு பூச்சிகளிடம்தான் ரொம்ப இஷ்டம் என நான் சொல்வேன். அந்த அளவுக்கு பூச்சிகள் மிகவும் வெற்றிகரமான ஜந்துக்கள் பூமியின் வரலாற்றில்.

வைரஸ்களின் நியூக்ளியர் அமிலம்: [பக்.37]
"வைரஸ்களில் டி.என்.ஏக்கு பதிலாக ரிபோ நியூக்ளிக் ஆஸிட் (ஆர்.என்.ஏ) என்கிற வேதிப்பொருள் உள்ளது" என்கிறார் பத்ரி. தவறு. வைரஸ்களின் உயிரியல் பாகுபாடே அவற்றின் உள்ளே இருக்கும் ஜெனிடிக் வேதிப்பொருள் DNA ஆ அல்லது RNA ஆ என்பதனை அடிப்படையாக கொண்டது. ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலுக்கான வைரஸின் ஜெனிடிக் வேதி பொருள் DNA தான். பெரியம்மைக்கும் அப்படியே. ரிட்ரோ மற்றும் ரிபோ வகை வைரஸ்கள்தாம் RNA ஐ ஜெனிடிக் வேதிப்பொருளாக கொண்டவை. உதாரணமாக எயிட்ஸ் வைரஸில் இருப்பது RNA. இத்தகைய தகவல் பிழைகள் கவனக்குறைவாலோ அல்லது அலட்சியத்தாலோ ஏற்படுபவை. இது புத்தகத்தின் முழுமதிப்பையும் ஒரு அறிவார்ந்த மாணவனின் பார்வையில் குறைத்துவிடலாம். அல்லது நல்ல ஆசிரியர் இத்தகைய நூல்களை தம் மாணவர்களுக்கு பரிந்துரைக்க மாட்டார். நூலின் மற்ற நல்ல அம்சங்கள் இதனால் அடிபட்டு போகும்.

டி.என்.ஏ [பக்.44]
"டி.என்.ஏ என்பது ஒரு நீண்ட கரிம வேதிப்பொருள். இதில் நியூக்ளியோடைட் என்கிற சில சேர்மங்களூம், நியூக்ளியோபேஸ் என்கிற நான்கு சேர்மங்கள் - சைடோ சைன்(சை), குவானைன் (கு), அடினைன் (அ), தைமன் (தை) உள்ளன." இந்த வாசகத்தில் இருக்கும் இலக்கணப் பொருளின்மை ஒரு புறம் இருக்கட்டும். பிரசித்தி பெற்ற டி.என்.ஏயின் அமைப்பை குறித்த ஒரு அடிப்படை புரிதலின்மையை இந்த வாசகம் காட்டுகிறது என்பதும் அத்தகைய வாசகம் பத்ரியால் எழுதப்பட்டது என்பதும்தான் சோகம். நியூக்ளியோடைட் என்பது நியூக்ளிக் அமிலத்தின் அடிப்படை கட்டமைப்பு பாகம். நியோக்ளியோடைட் என்பது ரிபோஸ் எனும் ஐந்து கார்பன்கள் கொண்ட பெண்டோ ஸ் மூலக்கூறு, அதனுடன் இணைந்த நியூக்ளியோபேஸ்கள் ஆகியவற்றாலும் பின்னர் இந்த கூட்டமைப்புக்கு ஒரு சார்வு பிணைப்பினை அளிக்கும் பாஸ்போரிக் அமில மூலக்கூறால் இணைக்கப்பட்டும் உருவாக்கப்படும். ஆக "நியூக்ளியோடைட் என்கிற சில சேர்மங்களும் நியூக்ளியோபேஸ் என்கிற நான்கு சேர்மங்கள்" DNA இல் இருப்பதாக சொல்வது, "இந்த அறை சுவர்களாலும் செங்கற்களாலும் செய்யப்பட்டது" என சொல்வதைப் போல பொருளுடையது. நியூக்ளியோபேஸ்கள் நியூக்ளியோடைட் அமைப்பின் ஒரு பகுதி. மீண்டும் மீண்டும் நியூக்ளியோடைட் அடுக்குகள் பாஸ்போரிக் அமில இழைகளில் கோர்க்கப்பட்டு இத்தகைய இரு இழைகள் பேஸ்களினிடையே ஏற்படும் ஹைட்ரஜன் இணைப்புகளால் நம் மனதில் இன்று நன்றாக பதிந்திருக்கும் டி.என்.ஏ மூலக்கூறு வடிவமாகிறது. இந்த இடத்தில் பத்ரி எத்தனையோ சுவாரசியமான விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்ல கிடைக்கும் வாய்ப்புகளை இழக்கிறார். ஏதோ மட்டமான அரசு பாடத்திட்ட உயிரியல் நூலின் சாரமற்ற நடை. சிறிதே இந்த இடத்தை மாற்றி எழுதிப் பார்க்கலாம்.

"சில கட்டிடங்களில் ஒரு அச்சினை சுற்றி சுழன்று செல்லும் படிக்கட்டுக்களை பார்த்திருப்பீர்கள். இதனை ஹெலிக்ஸ் என சொல்லுவார்கள். இதே போல கண்ணுக்கு தெரியாத ஒரு அச்சினை சுற்றிச்சுழலும் இரண்டு ஹெலிக்ஸ்களை கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த இரண்டு ஹெலிக்ஸுகளுக்கு இடையே ஏணிப்படிகள் போன்ற பிணைப்புகளையும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இதுதான் டி.என்.ஏ மூலக்கூறின் வடிவம். இந்த டி.என்.ஏ என்பதில் என்னவெல்லாம் இருக்கிறது. எப்படி ஒரு சுவர் ஒரே மாதிரியான செங்கற்களை அடிக்கி வைப்பதால் உருவாகிறதோ அது போல இந்த பெரிய மூலக்கூறும் சில அடிப்படையான அடுக்குகளால் உருவாகுகியுள்ளது. அந்த அடிப்படை செங்கலின் பெயர் நியூக்ளியோடைட். ஒரு நியூக்ளியோடைட் என்பதில் ஐந்து கார்பன்களால் ஆன சர்க்கரை (இதனை ரிபோஸ் என்பார்கள்) அதன் ஒரு பகுதியில் நியூக்ளியோபேஸ் என்கிற ஒரு சமாச்சாரம் ஆகியவை உள்ளன. இதே போல அடுத்த இழையிலும் ஒரு ஐந்து கார்பன் சர்க்கரை அதனுடன் ஒரு நியூக்ளியோபேஸ். இந்த இரண்டு இழைகளிலும் உள்ள நியூக்ளியோ பேஸ்கள் இருக்கின்றனவே அவை ஒன்றோடொன்று ஒரு பிணைப்பினை உருவாக்குகின்றன. இதுவும் கண்ணுக்கு தெரியாதுதான். இந்த பிணைப்புக்கு பெயர் ஹைட்ரஜன் பிணைப்பு. ஒவ்வொரு இழையிலும் உள்ள சர்க்கரைகளை இணைப்பது பாப்போரிக் அமில இழை. இந்த இரட்டை ஹெலிக்ஸ்களில் ஒவ்வொரு ஹெலிக்ஸுக்கும் முதுகெலும்பாக விளங்குவது இந்த பார்ப்போரிக் அமில இழைதான். ஆனால் டி.என்,ஏயின் மாயஜாலம் அதன் நியூக்ளிக் அமிலங்களில் உள்ளது. இரண்டு இழைகளிலும் இரண்டு நியூக்ளியோ பேஸ்களுக்குள் பிணைப்பு ஏற்படுகிறது என்று பார்த்தோமில்லையா...இந்த பிணைப்புக்கு விதிகள் இருக்கின்றன. இந்த நியூக்ளியோபேஸ்கள் நான்கு - அடினைன் க்வானைன் சைட்டோ ஸின் தயாமின். இந்த நான்கு பேஸ்களையும் இருவிதமாக பிரிக்கலாம். ப்யூரின்கள் பைரிமிடின்கள். இவற்றில் ப்யூரின்கள் என்பவை அடினைனும் க்வானைனும் மற்ற இரண்டும் பைரிமிடின்கள். இப்போது டி.என்.ஏ மூலக்கூறில் இரண்டு ஹெலிக்ஸுகளும் ஜோடி சேரும் போது ஒரு இழையிலுள்ள ப்யூரின் மற்றொரு இழையில் பைரிமிடினுடன்தான் ஜோடி சேரும். அடினைன் தையாமினுடனும் க்வானைன் சைடோ சைனுடனும் பொதுவாக ஜோடி சேரும். ஆக நமக்கு இப்போது நான்கு எழுத்துக்களும் அவற்றினை இணைக்க ஒரு இலக்கணவிதியும் கிடைத்துவிட்டதல்லவா? எப்படி தந்தியில் ஒன்றிரண்டு டக்கு டக்குகளை வைத்து செய்தித்தொடர்களை உருவாக்குகிறோமோ அதே போல இயற்கையும் இந்த நாலு எழுத்துக்களையும் இந்த இலக்கணவிதியையும் வைத்து உயிர் எனும் பெரிய காவியத்தை படைத்துவிட்டது. அதில்தான் எத்தனை எத்தனை முடிவில்லாத அத்தியாயங்கள்..."
இந்த நூல் தொடும் விஷயம் முக்கியமானது. எனவே அடுத்த பதிப்பினை சிறந்ததாக்க ஆசிரியருக்கும் பதிப்பகத்துக்கும் சில suggestions:
1. உயிர்களின் தோற்றம் குறித்து அடிப்படை ஆராய்ச்சிகளை நூல் குறிப்பிடவேண்டும். ஒபாரின்-கருதுகோள் யூரெ மில்லர் பரிசோதனை குறித்து பேசாத ஒரு நூல் அது குழந்தைகளுக்கான நூல் என்றாலும் கூட - முழுமை பெறாமல்தான் இருக்கும். கூடவே அண்மை காலங்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய வளிமண்டல நுண்ணுயிரிகள் கண்டுபிடிப்பு பான்ஸ்பெர்மியா கோட்பாடு ஆகியவற்றை குறிப்பிடலாம்.
2. அதிக படங்கள்: டி.என்.ஏ மூலக்கூறு, டார்வின், சில டைனோசார்கள், ஆதி-கரிமக்கடல், சில நுண்ணுயிரிகள் ஆகியவற்றின் படங்கள். அதிகமில்லை சிறியதாக பத்து படங்களாவது இருக்க வேண்டும்.
3. நூலின் அமைப்பு: Nothing in biology makes sense except in the light of evolution என்று உயிரியல் ஆசிரியர்களுக்கு கூறினார் தியோடாஸியஸ் தொப்ஸான்ஸ்கி எனும் புகழ்பெற்ற உயிரியலாளர். ஆனால் ஒரு சீரிய ஒழுங்கு நூலில் இல்லை. பின்வரும் விதமாக அத்தியாயங்கள் அமைக்கப்படுவதை குறித்து ஆசிரியர் யோசிக்க வேணும்:

அ) உயிர் எப்படி தோன்றியது?
i) பிரபஞ்சம் -> சூரியக்குடும்பம் -> பூமி
ii) உயிரின் தோற்றம்: தொன்மங்கள்; அலெக்ஸாண்டர் ஒப்பாரின்; யூரே முல்லர் பரிசோதனை; பான்ஸ்பெர்மியா; ஐஸ்ரோ பரிசோதனை
iii) வேறு கிரகங்களில் உயிரினங்கள் உண்டா

ஆ) உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி
i) ஆல்கே முதல் ஆதி மனிதன் வரை உயிர்களின் சுருக்கமான வரலாறு
ii) டார்வின்
iii) மரபணுவியல்
iv) நவ-டார்வினிய கோட்பாடு
v) உலகம் எனும் பேருயிரி: Gaia

இ) நாம் காணும் உயிர் மண்டலம்
i) தாவரங்கள்
ii) விலங்குகள்
iii) நுண்ணுயிரிகள்

ஈ) உயிரின் எதிர்காலம்
பத்ரியின் உயிர்கள் நூலின் contentஐயே இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தி மேலே சொன்ன கட்டமைப்புக்குள் கொண்டு வந்தால் உயிர்கள் நிச்சயம் சிறுவர்களுக்கான அறிவியல் நூல்களில் ஒரு மைல்கல்லாக விளங்கும்.

உயிர்கள் எப்படித் தோன்றின?
பத்ரி சேஷாத்ரி
ப்ராடிஜி பதிப்பகம், 2007
விலை ரூ 25

6 comments:

  1. உடனே படிக்க வேண்டும் என ஆவலை தூண்டுகிறது!

    ReplyDelete
  2. அவர் புத்தகத்தைப் படிச்சு உடனே, பிற்சேர்க்கையா உங்க விமர்சனத்தை இன்னொரு முறை படிக்கணும்னு தோணுது.

    நன்றி.

    ReplyDelete
  3. Good review and very deep criticisim...

    Regards,
    Saravanan

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete